டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று மல்யுத்தம். இந்நிலையில், இன்று நடைபெற்ற மல்யுத்த தகுதிச் சுற்று போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 


காலிறுதி போட்டியில், ஈரான் நாட்டைச் சேர்ந்த கியாசி செக்க மொர்டசாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில், 1- 2 என்ற புள்ளிக்கணக்கில் அவர் போட்டியை வென்று, அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில், ஃபால் ஓவர் முறையில் ஒரே மூவில் 2 புள்ளிகள் பெற்ற அவர், அதிரடியாக விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஃபால் ஓவர் அல்லது பின் என்றால், எதிர்த்து விளையாடுபவரை கட்டிப்போட்டு 2 நொடிகளுக்கு தாக்குப்பிடிக்க வேண்டும். மொர்டசாவை பின் செய்த பஜ்ரங், போட்டியை வென்றதாக அறிவிக்கப்பட்டது.











சார்பட்டா ஃபார்முலா:


சார்பட்டா திரைப்படத்தில், டான்ஸிங் ரோஸை கபிலன் வீழ்த்துவது போல, ஒரே சுற்றில் போட்டி முடிய நேரம் இருக்கும் முன்பே, பஜ்ரங் அதிரடியாக புள்ளிகளை வென்று போட்டியை தன்பக்கம் இழுத்துள்ளார். இரண்டு புள்ளிகள் பெற்று டெக்னிகலாக முன்னிலை பெறுவது அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.


அடுத்து இன்று மாலை நடைபெற இருக்கும் அரை இறுதி போட்டியில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற, 3 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற ஹஜி அலியேவை பஜ்ரங் எதிர் கொள்ள இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ப்ரோ மல்யுத்த போட்டியில் ஹஜி அலியேவை பஜ்ரங் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால், பஜ்ரங் பதக்கம் பெறுவதை உறுதி செய்வார்.


மல்யுத்த விளையாட்டில் இந்தியாவின் முக்கியமான பதக்க வாய்ப்பு என்றால் அது இவருக்குதான் இருந்தது என எதிர்பார்க்கப்பட்டது. தன்னுடைய குரு மற்றும் பயிற்சியாளர் யோகேஷ்வர் தத் போல் இவரும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முனைப்பில் களமிறங்கினார். யோகேஷ்வர் தத் 2012 ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.  65 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்கும் பஜ்ரங் புனியா இந்தப் பிரிவில் ஒலிம்பிக் போட்டிகளில் தரவரிசயில் 2ஆவது இடத்தில் உள்ளார். ஆகவே இவர் நிச்சயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.