விளையாட்டுத் துறைக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது இனி, மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.  இதற்கு முன்னர், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரில் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 






ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29-ம் தேதி, ஹாக்கி மேஜர் தயான் சந்த் பிறந்தநாள் அன்று தேசிய ஹாக்கி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி, மேஜர் தயான் சந்த்தை கெளரவிக்கும் வகையில், விளையாட்டுத் துறைக்கு வழங்கப்பட்டு வரும் நாட்டின் உயரிய விருதான கேல் ரத்னா விருது, தயான் சந்த் பெயரில் வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, பிரதமர் மோடி பகிர்ந்த ட்விட்டர் பதிவில், “மேஜர் தயான் சந்த் பெயரில் கேல் ரத்னா விருது வழங்க வேண்டுமென என்னிடம் நாட்டு மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அவர்களது பரிந்துரையை ஏற்று, இனி கேல் ரத்னா விருது மேஜர் தயான் சந்த் பெயரில் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.






ஹாக்கி விளையாட்டில், இந்தியாவுக்காக மூன்று ஒலிம்பிக் பதக்கங்களை வென்று தந்த அணியில் தயான் சந்த் இடம் பெற்றிருந்தார். அலகபாத்தை பூர்வீகமாக கொண்ட தயான் சந்த், இந்திய ஹாக்கி அணியின் முகமாக பின்நாளில் அறியப்பட்டார். ஏற்கனவே, மேஜர் தயான் சந்த் பெயரில், விளையாட்டு துறையில் வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களை கெளரவிக்கும் வகையில், ‘தயான் சந்த் விருது’ வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இப்போது கேல் ரத்னா விருது தயான் சந்த் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில், 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது. கடைசியாக இந்திய அணி 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. அதே போல, இந்திய மகளிர் ஹாக்கி அணி, இந்த ஒலிம்பிக் தொடரில் நான்காவது இடத்தில் நிறைவு செய்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.