டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை  69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் பங்கேற்றார். இந்த எடைப்பிரிவில் சிறப்பாக விளையாடிய லோவ்லினா பார்கோயின் வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்தியா வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 


 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு அசாம் மாநிலத்தைச் சேர்ந்த லோவ்லினாவிற்கு பல்வேறு பரிசுகள் கிடைத்தன. குறிப்பாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ், லோவ்லினாவிற்கு 1 கோடி ரூபாய் பரிசை வழங்கினார். அத்துடன் லோவ்லினாவிற்கு விரைவில் டிஎஸ்பி பணி வழங்கப்படும் என்று கூறியிருந்தார். 


 






இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக அவருடைய பணி ஆணை வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று காலை அவர் அசாம் மாநில காவல்துறையில் டிஎஸ்பியாக பொறுப்பு ஏற்று கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் லோவ்லினாவிற்கு டிஎஸ்பி பணி வழங்கப்பட்டதற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதைத் தொடர்ந்து தற்போது அவர் டிஎஸ்பியாக பதவியேற்று கொண்டார்.  அதன்பின்னர் அவர், "எனக்கு இந்த கௌரவத்தை வழங்கிய முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய முக்கியமான லட்சியம் குறிக்கோள் ஆகிய அனைத்தும் ஒன்றே ஒன்று தான். விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி 2024ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன்" எனக் கூறியுள்ளார். 


ஏற்கெனவே அசாம் மாநிலத்தில் இருந்து தடகள வீராங்கனை ஹீமா தாஸ் டிஎஸ்பி பதவி பெற்றார். தற்போது அவருக்கு பிறகு லோவ்லினா டிஎஸ்பி பதவியை பெற்றுள்ளார். லோவ்லினா பார்கோயின் 2 முறை உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல் 2 முறை ஆசிய குத்துச்சண்டை போட்டிகளிலும் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவற்றுடன் சேர்ந்து ஒலிம்பிக் போட்டியிலும் வெண்கலம் வென்று அசத்தியுள்ளதால் 23 வயதான இவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. 






சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பெருமை:


 


முன்னதாக லோவ்லினாவின் டோக்கியோ ஒலிம்பிக் அரை இறுதி போட்டியை காண, அசாம் சட்டப்பேரவை 20 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வாஸ் வேண்டுகோளுக்கு இணங்க சட்டப்பேர்வை சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் அப்போது மிகவும் வேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: இந்திய ஓபன் பேட்மிண்டன்: முன்னணி வீரர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் !