இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 11ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் சாய்னா நேவால், கிடாம்பி ஶ்ரீகாந்த்,லக்ஷ்யா சென்,பிரனாய் உள்ளிட்ட முன்னணி இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய வீரர் சாய் பிரணீத் கொரோனா தொற்று காரணமாக விலகியிருந்தார். அதனால் அவர் இத்தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் இந்தத் தொடரில் தற்போது மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய பேட்மிண்டன் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, "தற்போது நடைபெற்று வரும் இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றுள்ள 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களின் ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.அவர்கள் அனைவரும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த வீரர்களும் இந்தத் தொடரிலிருந்து விலகுகின்றனர்" எனத் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி இந்த கொரோனா தொற்று பாதித்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் கிடாம்பி ஶ்ரீகாந்த் மற்றும் அஸ்வினி போனப்பா உள்ளிட்ட முன்னணி வீரர் வீராங்கனைகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவருமே தொடரிலிருந்து விலகியுள்ளதாக தெரிகிறது. எனினும் எந்தெந்த வீரர்கள் தொடரிலிருந்து விலகியுள்ளனர் என்பது தொடர்பான அதிகார்ப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றில் இந்திய வீரர் கிடாம்பி ஶ்ரீகாந்த், லக்ஷ்யா சென், பிரணாய் உள்ளிட்ட வீரர்கள் வெற்றி பெற்று இருந்தனர். அதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் முதல் சுற்றில் வெற்றி பெற்று இருந்தார். இவர்கள் தவிர இரட்டையர் பிரிவில் ஆடவர் இணையான சத்விக்-சிராக் செட்டி ஜோடி முதல் சுற்றில் அசத்தலாக வெற்றி பெற்றது. அதேபோல் மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி போனப்பா-சிக்கி ரெட்டி ஜோடியும் முதல் சுற்றில் போராடி வெற்றி பெற்றது.
மேலும் படிக்க: பொங்கல் டெஸ்ட் கிரிக்கெட் தெரியுமா? 62 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் தொடங்கிய பாரம்பரிய போட்டி!