2021-ம் ஆண்டு இப்போதுதான் ஆரம்பமான மாதிரி இருந்தது, அதற்குள் டிசம்பர் மாதத்தை எட்டிவிட்டோம். டிசம்பர் மாதத்தின் பாதியையும் தாண்டிவிட்டதால், அடுத்த ஆண்டிற்கான திட்டங்கள், ஐடியாக்கள் என ஒரே ‘நியூ இயர்’ மோடிற்கு அனைவரும் வந்துவிட்டோம். விளையாட்டு துறையைப் பொருத்தவரை, இந்த ஆண்டு இந்தியாவுக்கு வெற்றிகரமான ஆண்டாகவே இருந்திருக்கிறது. கிரிக்கெட் மட்டுமின்றி வேறு விளையாட்டுகளிலும் தலைப்புச் செய்திகளை தொட்ட வீரர் வீராங்கனைகள் ஏராளம். 


ஒலிம்பிக், பாராலிம்பிக் என சர்வதேச விளையாட்டு தொடர்களில் இந்திய வீரர் வீராங்கனைகள் பதக்கங்களை வென்று குவித்தனர். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 7 பதக்கங்களை வென்று அசத்தியது. அத்துடன் இதற்கு முன்பாக 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வென்று இருந்த 6 பதக்கங்கள் என்ற எண்ணிக்கையை முறியடித்து புதிய சாதனையை படைத்தது. மேலும் 13ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் தங்கம் வென்றது. கடைசியாக இந்தியா 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் வென்றது. அதன்பின்னர் மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது. 


இந்நிலையில், 2021-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் சாதித்து, மக்களை திரும்பி பார்க்க வைத்த இந்திய வீரர் வீராங்கனைகளை பற்றிய ஒரு அலசல் இதோ!


1. மீராபாய் சானு: (வெள்ளி)


மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று டோக்கியோவில் இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்தார். 


2. பி.வி.சிந்து: (வெண்கலம்)

 

மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அத்துடன் தொடர்ச்சியாக இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார். 

 

3.லோவ்லினா பார்கோயின்: (வெண்கலம்)

 

மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் லோவ்லினா பார்கோயின் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கத்தை பெற்று தந்தார். 

 

4. இந்திய ஆடவர் ஹாக்கி அணி: (வெண்கலம்)

 






 

இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்க போட்டியில் ஜெர்மனி அணியை எதிர்கொண்டது. அதில் 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கத்தை வென்றது. அத்துடன் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் பதக்கம் வென்று சாதித்தது. 

 

5. ரவிக்குமார் தாஹியா: (வெள்ளி)

 

சுஷில் குமாருக்கு பிறகு ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளி வென்ற இரண்டாவது இந்திய மல்யுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரவிகுமார் தாஹியா.

 

6. பஜ்ரங் புனியா: (வெண்கலம்)

 

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் மிகப்பெரிய பதக்க எதிர்பார்ப்புகளில் ஒருவர் பஜ்ரங் புனியா. அவர் 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் 3 முறை உலக சாம்பியன் இடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். எனினும் வெண்கலப்பதக்க போட்டியில் கஜகிஸ்தான் வீரரை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். 

 

7. நீரஜ் சோப்ரா: (தங்கம்)

 






டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் ஒரே தங்கத்தை வென்றவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தான். இதன்மூலம் நீண்ட நாளாக இருந்த ஒலிம்பிக் தங்கப்பதக்க ஏகத்தையும் அவர் உடைத்தார். 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண