ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இந்த போட்டிகள் அக்டோபர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் 13 போட்டிகளில் 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், தற்போது நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில், 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் இந்தியாவில் இருந்து 143 பயிற்சியாளர்களும் சீனா சென்றுள்ளனர்.
இந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அங்கு நடைபெறும் 17 விதமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
பதக்க வேட்டையில் இந்தியா:
இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி மொத்தம் 17 பதக்கங்களை வென்றது. இதில் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் அடக்கம்.
இதில் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை பிராச்சி யாதவ் பெற்றுக் கொடுத்தார். பின்னர், ஷைலேஷ் ஒரு தங்கப்பதக்கத்தையும் , மாரியப்பன் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுக்கொடுத்தனர்.
இன்றைய போட்டியில் அதிகமான பதக்கங்கள் இந்தியாவிற்கு தடகள போட்டியின் மூலம் தான் கிடைத்தது.
அதன்படி, ஆடவருக்கான கிளப் த்ரோ F51 போட்டியில் பிரணவ் சூர்மா தங்கப் பதக்கத்தை வென்றார். அவர் வீசிய தூரம் 30.01 மீட்டர். அதேபோல் சகநாட்டு வீரர்களான தரம்பிர் (28.76 மீ) மற்றும் அமித் குமார் (26.93 மீ) முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினர்.
ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி47 பிரிவில் நிஷாத் குமார் 2.02 மீட்டர் உயரம் பாய்ந்து தங்கம் வென்றார்.
அதேபோல், ராம் பால் 1.94 மீட்டர் உயரம் பாய்ந்து வெண்கலம் வென்றார். பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்ட் எஸ்எச்1 இறுதிப் போட்டியில் அவனி லெகாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 249.6 புள்ளிகளுடன் கேம்ஸ் சாதனையை முறியடித்து, இந்தியாவின் நான்காவது தங்கத்தை உறுதி செய்தார். அதேபோல் ஜூடோவில் இந்தியா இரண்டு பதக்கங்களை பெற்றது.
நான்காவது இடம்:
இன்றைய போட்டிகளில் 31 தங்கம், 29 வெள்ளி மற்றும் 23 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 83 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் இருக்கிறது. 9 தங்கம், 9 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை பெற்று ஈரான் இரண்டாவது இடத்தில் உள்ளது.
6 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்திலும், அதேபோல் 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடத்தில் இருக்கிறது.
5 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்று தாய்லாந்து அணி 5 வது இடத்தில் இருக்கிறது.
மேலும் படிக்க:AFG vs PAK: கிண்டலடித்த ரசிகர்கள்! 1168 பந்துகளுக்கு பிறகு பவர்பிளேயில் சிக்ஸர் அடித்த பாகிஸ்தான்..!
மேலும் படிக்க: Virat Kohli : ”அவன் குறுக்க மட்டும் போய்டாதீங்க சார்”- 4.3 மில்லியன் பார்வைகளை ’டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்’ பதிவு செய்த கோலியின் ஆட்டம்!