ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நேற்று (அக்டோபர் 22) சீனாவில் தொடங்கியது. அதன்படி இந்த போட்டிகள் அக்டோபர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


கடந்த முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் 13 போட்டிகளில் பங்கேற்க 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில்,  தற்போது நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில்,  191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் பங்கேற்றுள்ளனர். 


அதேபோல் இவர்களை வழிநடத்த 143 பயிற்சியாளர்களும் சீனா சென்றுள்ளனர்.


இந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அங்கு நடைபெறும் 17 விதமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 


வெள்ளி வென்ற தமிழக வீரர்:


இந்நிலையில், இன்று (அக்டோபர் 23) நடைபெற்ற ஆடவர் உயரம் தண்டுதல் 63 பிரிவில்  தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதேபோல் மற்றொரு இந்திய வீரர் ஷைலேஷ் குமார் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மற்றொரு வீரரான ராம்சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.


வாழ்த்திய பிரதமர், முதல்வர்:


இந்நிலையில், வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மாரியப்பன் தங்கவேலுக்கு வாழ்த்துக்கள்.


ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் T63 போட்டியில் வெள்ளிப் பதக்கம் அவரது அசாத்தியமான திறமைக்கும் உறுதிக்கும் இது ஒரு சான்று. அவரது எதிர்கால முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 


மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “AsianParaGames-ல் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி வென்றதற்காக நமது தடகள வீரர்களான ஷைலேஷ் குமார் மற்றும் மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு பாராட்டுக்கள். உங்களின் சாதனையால் தேசம் பெருமிதம் கொள்கிறது.” என்று கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 23) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆசியன் பாரா விளையாட்டு 2022 உயரம் தாண்டுதல் T63 பிரிவில் வெள்ளி வென்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் மீண்டுமொருமுறை பெருமை தேடித்தந்துள்ள நமது  மாரியப்பன் தங்கவேலுவுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்”என்று கூறியுள்ளார்.


தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “AsianParaGames2022-ல் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற நம் தமிழ்நாட்டு வீரர் தம்பி மாரியப்பன் தங்கவேலுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.


இந்த பிரிவில், தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களையும் இந்திய வீரர்கள் பெற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. பதக்கம் வென்ற நம் வீரர்களுக்கு பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Asian Para Games 2023 LIVE: ஆசிய பாரா விளையாட்டில் அசத்தும் இந்தியர்கள் - குவியும் பதக்கங்கள்


மேலும் படிக்க: Bishan Singh Bedi Dies: இந்திய கிரிக்கெட்டின் சுழல் ஜாம்பவான் பிஷன்சிங் பேடி மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி