திருவிழா என்றால் எல்லோருக்கும் கொள்ளை பிரியம் அதிலும் ’கிரிக்கெட் திருவிழா” என்றால் சொல்லவா வேண்டும்.
ஐபிஎல் ஃபீவர் முடிந்து தற்போது ரசிகர்களிடம் ‘உலகக்கோப்பை’ ஃபீவர் தொடங்கி விட்டது. ஆம், கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐசிசி உலகக்கோப்பை 2023’ கிரிக்கெட் தொடர் மிக பிரமாண்டமாக நாளை (அக்டோபர் 5) தொடங்குகிறது.
இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியானது உலகின் மிகப்பெரிய மைதானமான ‘நரேந்திர மோடி’ மைதானத்தில் நடைபெறுகிறது.
இச்சூழலில் அங்கு செய்யப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தான தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்:
நரேந்திர மோடி மைதானம்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இருக்கும் நரேந்திர மோடி மைதானம் சுமார் 63 ஏக்கர் பரப்பளவை கொண்டுள்ளது. இங்கு சுமார் 1.30 லட்சம் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
நாளை (அக்டோபர் 5) நடைபெறும் முதல் நாள் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் நேரடியாக மோதுகின்றன. உலகின் டாப் அணிகள் ஒன்றான இவ்விரு அணியும் மோதுவதால் மைதானத்தில் கூட்டம் அலைமோதும்.
அதனால் குஜராத் கிரிக்கெட் சங்கம் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துள்ளது.
அதில், மருத்துவம் தொடர்பான நடவடிக்கையாக ஆறு மினி ஐசியுக்களும் இடம் பெற்றுள்ளது. எந்த ஒரு எமர்ஜென்சி சூழலிலும் இதை ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
போலீஸ் பாதுகாப்பு:
மைதானத்திற்கு உள்ளே மற்றும் வெளியே என 3000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த குஜராத் கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும், 600 தனியார் பாதுகாவலர்களும் மைதானத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.
இந்தியா- பாகிஸ்தான்:
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் வரும் அக்டோபர் 14 ஆம் தேதி இதே மைதானத்தில் நடைபெற உள்ள சூழலில், “ ஐசிசி மற்றும் பிசிசிஐ வழிகாட்டுதல்களின் படி மைதானத்தில் கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை உருவாக்க முயற்சித்துள்ளோம்” என்று குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (ஜிசிஏ) செயலாளர் அனில் படேல் கூறியுள்ளார்.
மேலும் , அவர் “ போட்டியின் போது ரசிகர்களுக்காக மைதானத்தில் மினி ஐசியூக்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் 4000 போலீசாரும், 800 தனியார் காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு இருக்கை:
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு என்று சிறப்பு இருக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் தங்கள் மருத்துவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட்டை பார்ப்பதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டிருப்பதாக அனில் படேல் தெரிவித்துள்ளார்.
தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் கோரிக்கையின் படி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மைதானத்தில் இருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடு:
ரசிகர்கள் மைதானத்தில் இருந்து அரை மணி நேரத்திற்குள் முழுமையாக வெளியேறாலாம். ஒரே நேரத்தில் 80 பேர் வரை மைதானத்தில் இருந்து வெளியே வரலாம்.
5000 க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும், 800 க்கும் மேற்பட்ட நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Rishabh Pant birthday: இந்திய அணியின் செல்லக்குட்டிக்கு இன்று பிறந்தநாள்.. ரிஷப் பண்ட் செய்த 5 தரமான சம்பவங்கள் இதோ!
மேலும் படிக்க: Sachin Tendulkar: 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான சர்வதேச தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்