2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக்கோப்பைக்கு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுலகரை சர்வதேச தூதராக ஐசிசி நியமனம் செய்து அவருக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. இதனால் கிரிக்கெட் ஜாம்பவான்கள் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


உலகககோப்பை குறித்து சச்சின் தெண்டுல்கர் கூறியதாவது, 1987ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பால் பாய் ஆக பணியாற்றியதில் இருந்து உலகக்கோப்பைத் தொடரில்  6 முறை நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் (1992, 1996, 1999, 2003, 2007 மற்றும் 2011) வரை உலகக் கோப்பைகள் என் இதயத்தில் எப்போதும் தனி இடத்தைப் பிடித்துள்ளன. 2011ல் உலகக் கோப்பையை வென்றது எனது கிரிக்கெட் பயணத்தின் பெருமையான தருணம்.  இந்தியாவில் 2023 ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் பல சிறப்பு அணிகள் மற்றும் வீரர்கள் கடுமையாகப் போட்டியிட உள்ளதால், இந்த அற்புதமான போட்டியை நான் உற்சாகமாக எதிர்நோக்குகிறேன்” என கூறியுள்ளார். 


இதற்கு முன்னர் ஐசிசி உலகக்கோப்பைக்கான சர்வதேச தூதர்கள் இவர்கள்தான், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், தென்னாப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ், இங்கிலாந்து உலகக் கோப்பை வென்ற கேப்டன் இயான் மோர்கன், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச், இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், இந்தியாவின் சுரேஷ் ரெய்னா மற்றும்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் ஆகியோர் இருந்துள்ளனர். 






கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக விளங்கிய இந்திய முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். 1989ல் இந்தியாவுக்காக அறிமுகமாகி 200 டெஸ்ட், 463 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டி விளையாடினார். அவர் டெஸ்டில் 15,921 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டி20 போட்டிகளில் 114 ரன்களும் எடுத்துள்ளார். டெண்டுல்கர் ஒரு பேட்டிங் ஜாம்பவான், அவர் எல்லா காலத்திலும் சிறந்த பேட்ஸ்மேன் என பல இளைய தலைமுறையினருக்கு உற்சாகமூட்டுபவராக இன்றுவரை உள்ளார். அவர் தனது அபாரமான பேட்டிங் திறமை, எல்லா நிலைகளிலும் ரன் குவிக்கும் திறமைக்காக பாராட்டைப் பெற்றவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார், மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


இதற்கு முன்னர் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து இந்த உலகக்கோப்பைத் தொடருக்கான கோல்டன் டிக்கெட்டினை வழங்கினார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின், “ 1987 உலகக் கோப்பையில் பால் பாயாக இருந்து 1992 முதல் 2011 வரை ஆறு உலகக் கோப்பைகளில் பங்கேற்றது, இப்போது 2023 இல் இந்த கோல்டன் டிக்கெட்டைப் பெறுவது வரை - இது உண்மையில் கனவுகளிலிருந்து பின்னப்பட்ட பயணம், எனக்குள் இருக்கும் உற்சாகம் குறையாமல் உள்ளது. நன்றி ஐசிசி மற்றும் பிசிசிஐ என குறிப்பிட்டிருந்தார்.