இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் இன்று தனது 26வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பண்ட் நீண்ட நாட்களாக விபத்து காரணமாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பண்ட் கார் விபத்து ஒன்றில் சிக்கி படுகாயமடைந்தார். அதன் பிறகு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர்,  உடல் நலம் பெற்று குணமடைந்து வருகிறார். விரைவில் ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்து இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


ரிஷப் பண்ட் தனது 19வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதற்குப் பிறகு, இவர் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்தார். இந்திய அணி பலமுறை தோல்வியை நோக்கி சென்றபோது வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர் ரிஷப் பண்ட். 


அப்படி, ரிஷப் பண்ட் செய்த 5 தரமான சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.. 


ரிஷப் பண்ட் தனது 19 வயதில், 2016 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் முதன்முறையாக இந்தியாவின் கேப்டனாக பதவி வகித்தார். அப்போது போட்டியின் காலிறுதியில் நமீபியாவுக்கு எதிராக சதம் அடித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச் சென்றார்.


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான சதம்: 


20 வயதில் ரிஷப் பந்த் சர்வதேச டி20 மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக டெஸ்டில் அறிமுகமான பண்ட், 2 வருடங்களுக்கு பிறகு அதாவது, ஜனவரி 2019 இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மிக முக்கியமான மற்றும் கடைசி போட்டியில் தனது முதல் சதத்தை அடித்து தான் யார் என்பதை நிரூபித்தார். சிட்னியில் நடந்த நான்காவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தார். இதன் மூலம் தொடரை சமன் செய்யும் ஆஸ்திரேலியாவின் கனவு தகர்ந்து டெஸ்ட் தொடரை 2-1 என இந்தியா கைப்பற்றியது.


இந்தியாவை கரை சேர்த்த பண்ட்: 


பார்டர் கவாஸ்கர் டிராபி 2020-21 க்கான ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இந்திய அணிக்கு பல சிரமங்கள் நிறைந்ததாக இருந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் பல இந்திய வீரர்கள் காயம் அடைந்தனர், தொடரில் இருந்தும் விலகினர். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என சமநிலையில் இருந்தது. இந்நிலையில், சிட்னியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா மீண்டும் எப்படியாவது வெல்ல வேண்டும் என போராடியது. ஆஸ்திரேலிய அணி வைத்த வலையில் இந்திய அணியில் தொடக்க வீரர்கள் வீழ்ந்தனர். அந்த நேரத்தில் ரிஷப் பண்ட் மட்டும் தனி ஒரு நபராக போராடி 97 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தார்.


 காபாவின் பெருமையை உடைத்து எறிந்த ரிஷப் பண்ட்: 


ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின்போது சிட்னி டெஸ்டில், ரிஷப் பந்த் டிரெய்லரை மட்டுமே காட்டினார். அதனை தொடர்ந்து அடுத்த டெஸ்டான 19 ஜனவரி 2021 அன்று நடந்த பிரிஸ்பேனில் உள்ள காபாவில் முழுப் படத்தையும் ஓட்டினார். பிரிஸ்பேனின் காபா ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா அணி அதுவரை தோல்வியே சந்திக்காத அணியாக இருந்தது. இந்த ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா அணியே ஆதிக்கம் செலுத்தியது. காபா டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்றும், இந்தியா தொடரை இழக்கும் என்றும் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், காபாவின் பெருமையை உடைத்த பண்ட் இன்னிங்ஸை யாரால் மறக்க முடியும். இந்திய அணிக்கு 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக துரத்தியது. இங்கு இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. பண்ட்டின் இந்த இன்னிங்ஸை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்லலாம்.


இங்கிலாந்துக்கு எதிராக சதம்: 


மார்ச் 2021 இல் அகமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் ரிஷப் பண்ட் அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார். 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. இத்தகைய சூழ்நிலையில், இந்திய அணியும் மீண்டும் களமிறங்க விரும்புகிறது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 205 ரன்கள் எடுத்தது, பதிலுக்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் எடுத்தது. ரிஷப் பந்த் 101 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் 135 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டதால், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.