அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக பாஜக தரப்பில் இருந்து எந்த அழுத்தமும் தரப்படவில்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.  


சேலம் மாவட்டம் எடப்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் தொண்டர்களின் மனநிலை பற்றி எடுத்துச் சொல்லப்பட்டது. அதனடிப்படையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், பாஜக கூட்டணியில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது. தேர்தல் நேரத்தில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் சேரும் என்பதை நாங்கள் தெரிவிப்போம். வி.பி துரைசாமியின் கருத்துக்கு நான் எதுவும் சொல்ல முடியாது. அதிமுக தலைமையிலான கூட்டணி பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாக 10 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தற்போது நிச்சயம் 40 இடங்களிலும் வெல்லும். 100 சதவீதம் அதிமுக வெற்றி பெரும்" என குறிப்பிட்டுள்ளார். 


மேலும், “கடந்த 2 ஆண்டுகளாக மிக மோசமான ஆட்சி  நடைபெற்று வருகிறது. 10 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை கூட திமுக நிறைவேற்றவில்லை. ஆனால் 95% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திமுக பச்சை பொய் சொல்லி வருகிறது. மின் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு என அனைத்தும் உயர்ந்துள்ளது. திமுக ஆட்சியில் மக்கள் வாழவே முடியாமல் சிரமப்படுகின்றனர். தென்னை விவசாயிகள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே அதிமுக எம்எல்ஏக்கள் நேற்றைய தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். கூட்டணிக்கும் இந்த சந்திப்பிற்கும் எந்த சம்மதமும் இல்லை.  


இந்தியா கூட்டணிதான் நாடகம். இந்தியா கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறவில்லை. பல்வேறு முரன்பட்ட கருத்துள்ள கட்சிகள் இதில் ஒன்றாக இணைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்தியக் கூட்டணியில் இருப்பவர்களுக்குள் குழப்பம் நீடித்து வருகிறது” என தெரிவித்தார். 


மேட்டூர் அணை மற்றும் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பேசுகையில், “அவசர கதியில் முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். அப்போது டெல்டாகாரன் என்ற அவர் காவிரி நீரை பெற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்; ஆனால் கும்ப கர்ணன் போல தூங்கி விட்டார். 5.50 லட்சம் ஏக்கரில் 3 லட்சம் ஏக்கர் விவசாயம் கருகி விட்டது.  இந்தியா கூட்டணியில் சேரும் போது காவிரி விவகாரத்திற்கு தீர்வு கேட்டு முதலமைச்சர் கூட்டணியில் சேர்ந்திருக்க வேண்டும். டெல்டா பாசனத்தின் அவல நிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர்தான் காரணம். ஆட்சி அதிகாரத்தை மட்டுமே பார்க்கும் முதலமைச்சர் டெல்டா விவசாயிகளின் கண்ணீரை பார்க்கவில்லை இது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி.  


கிராமசபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக வேண்டும் என பாஜக மத்திய தலைவர்கள் யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. பாஜக தலைவரை மாற்ற வேண்டும் என அதிமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளைதான் ஆசிரியர்கள் கேட்கிறார்கள். கேட்க வேண்டியது அவர்கள் கடமை; கொடுக்க வேண்டியது அரசின் கடமை” என பேசியுள்ளார்.


CM STALIN: ”தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பை திரும்பப் பெறுக” - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்