டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களில் அமெரிக்க ஓபன் தொடர் மிகவும் முக்கியமான கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர் ஆகும். அமெரிக்காவின் நியூயார்க் மைதானத்தில் ஆண்களுக்கான பட்டத்தை வெல்ல்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டி நடைபெற்றது.


இந்த போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சும், ரஷ்யாவின் டேனியல் மெட்வெதேவுடன் மோதினார். மெட்வதேவ் டென்னிஸ் வீரர்கள் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளார். இந்த போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று புதிய வரலாற்று சாதனை படைப்பார் என்று அவரது ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.




ஆனால், போட்டித் தொடங்கியது முதலே ரஷ்ய வீரர் மெட்வதேவ் ஜோகோவிச்சிற்கு கடும் நெருக்கடி அளித்தார். இதனால், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் இழந்தார். இதனால், நெருக்கடியில் தனது இரண்டாவது செட்டை ஆடிய ஜோகோவிச் மிகவும் பதற்றமடைந்தார்.


இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மெட்வதேவ். சிறப்பாக ஆடி இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். அடுத்தடுத்து இரண்டு செட்களை இழந்ததால் மிகவும் கடுப்பாகிய ஜோகோவிச் மைதானத்திலே தனது டென்னிஸ் பேட்டை தரையில் அடித்தே உடைத்தார். ஜோகோவிச்சின் இந்த செயல் ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை தந்தது.


இதையடுத்து, அடுத்த செட்டையும் தனது வசமாக்கிய மெட்வதேவ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பையை கைப்பற்றி வரலாற்றில் தனது பெயரை இடம்பெறச் செய்தார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-4,6-4,6-4 என்ற கணக்கில் தோல்வியடைந்தது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது. ஜோகோவிச் கடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் இதே மெட்வதேவை வீழ்த்திதான் கோப்பையை கைப்பற்றியிருந்தார். ஆனால், இந்த போட்டியில் மெட்வதேவ் ஜோகோவிச்சை வீழ்த்தி பழிதீர்த்துக் கொண்டார்.




ஜோகோவிச் இந்த கோப்பையை வென்றிருந்தால், ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை கைப்பற்றி காலண்டர் ஸ்லாமை வென்றவர் என்ற சாதனையை படைத்திருப்பார். காலண்டர் ஸ்லாம் என்றால் ஒரே ஆண்டில் டென்னிஸ் தொடரின் முக்கிய கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களான விம்பிள்டன், ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் மற்றும் அமெரிக்க ஓபன் இந்த நான்கு கிராண்ட்ஸ்லாம்களையும் ஒரே ஆண்டில் கைப்பற்றுபவர்கள் காலண்டர் ஸ்லாம்களை கைப்பற்றியவர்கள் என்று கவுரவிக்கப்படுவார்கள்.


ஜோகோவிச் இந்தாண்டு விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகியவற்றை கைப்பற்றியிருந்தார். இதனால். அமெரிக்க ஓபனையும் கைப்பற்றி காலண்டர் ஸ்லாமை கைப்பற்றியவர் என்ற சாதனையை படைப்பார் என்று பெரிதும் எதிர்பார்ககப்பட்டது. ஆனால், அந்த அரிய சாதனை அவரது கை நழுவிப்போனது. இதற்கு முன்பு, இந்த சாதனையை 1969ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் ராட் லேவர் மற்றும் 1988ம் ஆண்டு ஸ்டெபி கிராப் ஆகியோர் நிகழ்த்தியுள்ளனர்.




இது மட்டுமின்றி, இந்த போட்டியில் வென்றிருந்தால் சுவிட்சர்லாந்தில் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகியோரின் சாதனையை முறியடித்திருப்பார். அவர்கள் இருவரும் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை கைப்பற்றியுள்ளனர். ஜோகோவிச்சும் 20 கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை கைப்பற்றியுள்ளார். இந்த போட்டியில் வென்றிருந்தால் அவர்களை பின்னுக்கு தள்ளி அதிக கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை கைப்பற்றிய வீரர் என்ற புதிய சாதனையை படைத்திருப்பார். ஆனால், அந்த சாதனையும் நழுவிப் போகியுள்ளது.


நடப்பாண்டில் நடைபெற்ற இந்த அமெரிக்க ஓபன் தொடர் டென்னிஸ் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்தாக அமைந்திருக்கும். மகளிர் அமெரிக்க ஓபன்பட்டத்தை 18 வயதே ஆன எம்மா ரடுகானு கைப்பற்றினார். தற்போது ஆண்கள் பட்டத்தை 25 வயதே ஆன மெட்வதேவ் கைப்பற்றியுள்ளார். இருவருக்கும் இதுதான் முதல் கிராண்ட்ஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.