தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிக்கு கிராம மக்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்ஷினி என்பவர் அதே ஊரில் உள்ள அரசுப் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஐதராபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று 14 வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

 


 



 





இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தர்ஷினிக்கு தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பால முருக மகாராஜா தலைமையிலான கிராம மக்கள் மேள தாளம் முழங்க மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தங்க பதக்கம் வென்ற மாணவியை தோளில் தூக்கி வைத்து ஊர்வலமாக அரசுப் பள்ளிக்கு அழைத்து வந்த நிலையில் அரசுப் பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.



 

இதுகுறித்து மாணவி தர்ஷினி கூறுகையில்,” ஐதராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளேன். இது மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் எனக்கு கிராம மக்களும், ஆசிரியர்கள் அனைவரும் வரவேற்பு அளித்தது மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று தொடர்ந்து விளையாடி வெற்றிபெற வேண்டும் என ஊக்கம் கிடைத்துள்ளது. என்னைப் போன்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த சதுரங்க விளையாட்டை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஆசை. நான் விளையாடி வெற்றிபெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர், உறவினர், நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.