பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், எச். ராஜா, மாவட்ட துணை தலைவர் கரு நாகராஜன், கேசவ விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கிய போது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மருத்துவ பரிசோதனைக்காக சென்றதால் சற்று தாமதமாக வந்து கலந்துக்கொண்டார்.


கூட்டணி முறிவு:


மக்களவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் தற்போது முதல் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இதில் முக்கிய திருப்பமாக கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுக மற்றும் பாஜக இடையே இருந்த கூட்டணி முறிந்தது. அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


மேலும் சில தினங்களுக்கு முன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூட்டணி முறிவு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் தேசிய தலைவர்களுடன் பேசப்பட்டதாக தகவல் வெளியானது. அக்டோபர் 3 ஆம் தேதி நடைபெற இருந்த இந்த கூட்டம் அண்ணாமலை டெல்லியில் இருந்த காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.


7 மாதத்திற்கு ஓய்வு கிடையாது:


இப்படி பரபரப்பான சூழலில் இந்த கூட்டம் நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன் வி.பி துரைசாமி பாஜக அதிமுக கூட்டணி தொடரும், அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார். ஆனால் தற்போது மத்தியில் இருந்து கூட்டணி குறித்து எந்த கருத்தும் கூறக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மத்திய பாஜக என்ன முடிவெடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவோம் என்றும் வி.பி துரைசாமி குறிப்பிட்டார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பணிகள், பூத் கமிட்டி, மாவட்ட ரீதியான பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என பாஜக நிர்வாகிகள் குறிப்பிட்டுள்ளனர்.


இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “அடுத்த 7 மாத காலத்திற்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். 'என் மண் என் மக்கள் ' நடைபயணத்தின்போது மத்திய அரசுத் திட்டங்களால் பயனடைந்த  பயனாளிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில்  விரிவுபடுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும். அடுத்த 7 மாத காலம் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும்.  


பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில்  சேர்க்க வேண்டும் , பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக  வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள். கூட்டணி விவகாரம் தொடர்பாக எனது முடிவை மேலிடத்தில் கூறி விட்டேன். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும்” என பேசியுள்ளார்.


மக்களவைத் தேர்தலிலே கவனம்:


இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், “ வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தற்போது எங்கள் கவனம் எல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் தான் உள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதிக்கவில்லை.  கூட்டணியில் இருந்து சென்றவர்கள் குறித்து நாம் ஏன் பேசனும். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவினர் அனைவரும் முழுமையாக பனியாற்றுவது குறித்து பேசினோம். தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழ்நாட்டில் வெற்றிப்பெற செய்வதே ஒரே குறிக்கோள்” என குறிப்பிட்டு பேசியுள்ளார்.