அமலாக்கத்துறை மூலம் பாஜக அரசு, எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.- நேற்று ஆம் ஆத்மி கட்சி எம்.பி கைது செய்யப்பட்டதும், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் நடக்கும் சோதனையும் எடுத்துக்காட்டு என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.


பண மோசடி வழக்கில் அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யேந்தர் ஜெயின், கடந்தாண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர், டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர். இதை தொடர்ந்து,  டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். 


இந்த நிலையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங்கின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து, அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


அதேபோல் இன்று காலை சென்னையில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களும் அடங்கியுள்ளன. குறிப்பாக  அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகனின்  வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகன் அந்த வீட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தியாகராய நகரில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஓட்டலிலும், வேளச்சேரியில் அவருக்கு சொந்தமாக உள்ள மருத்துவமனையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. குரோம்பேட்டை ரீலா மருத்துவமனை, பாரத் பல்கலைக் கழகம், மதுபான ஆலை, மாமல்லபுரத்தில் உள்ள கால்டன் சமுத்ரா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு அல்லது ஏற்கனவே அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என, எதன் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என தற்போது வரை தெரியவில்லை.


இப்படி தொடர் சோதனை நடைபெற்று வருவதை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மத்திய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை! ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கைக் கைது செய்ததும், திமுக எம்பி ஜெகத்ரக்ஷகனின் வீட்டில் சோதனை நடத்துவதும், இந்தியத் தொகுதித் தலைவர்களுக்கு எதிராக அரசியல் நோக்கங்களுக்காக சுதந்திரமான விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதற்கான தெளிவான எடுத்துக்காட்டுகள். எதிர்க்கட்சித் தலைவர்களை திட்டமிட்டு துன்புறுத்துவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். வெளிப்படையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை பாஜக மறந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயகத்தையும் புறக்கணிப்பதில் நரகத்தில் இருப்பதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையை கண்டு பா.ஜ.க தெளிவாக பயப்படுகிறது. அவர்கள் உண்மையான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என குறிப்பிட்டுள்ளார்.