மூத்த இந்திய ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் அவரது ஓய்வு குறித்த கேள்விக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை பொறுத்து பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.


ஓய்வு எப்போது?


35 வயதான ஜாம்பவான் வீரர், 2006-ல் இந்தியாவில் அறிமுகமான பிறகு 300 சர்வதேசப் போட்டிகளை நெருங்கி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் (ACT) கிரிஷன் பகதூர் பதக்குடன் இந்தியாவுக்காக கோல்கீப்பிங்கை பகிர்ந்து கொள்கிறார். “இந்த வயதில், அடுத்த இரண்டு வருடங்களைப் பற்றி என்னிடம் கேட்காமல் இருப்பது நல்லது. நான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருக்கிறேன், அதன் பிறகு, விஷயங்கள் எப்படி நடக்கின்றன என்பதைப் பார்க்கிறேன்,” என்று ஸ்ரீஜேஷ் PTI இடம் கூறினார்.



அடுத்த ஆசியகோப்பை 


அடுத்த ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியில் ஆடுவாரா என்ற சந்தேகத்திற்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். ACT இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் போட்டியாகும், ஆனால் அடுத்த தொடர் நடைபெறும் இடம் மற்றும் தேதிகள் குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. "நோவக் ஜோகோவிச் சொன்னது போல், '35 என்பது புதிய 25'. எனவே, நான் நிச்சயமாக இருப்பேன்,” என்று புதனன்று இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு ஸ்ரீஜேஷ் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: World Cup 2023 Tickets: காலண்டரை எடுங்க, குறிங்க.. இந்தெந்த நாட்களில் உலகக் கோப்பை டிக்கெட்கள் விற்பனை.. ட்வீட் போட்ட ஐசிசி


பாகிஸ்தான் போட்டியில் உணர்ச்சிவசப்பட எதுவும் இல்லை


பாகிஸ்தான் உடனான போட்டி குறித்து பேசும்போது, “இந்த கட்டத்தில் அனைத்து போட்டிகளும் எங்களுக்கு முக்கியமானவை. இதுவும் ஒரு போட்டி அவ்வளவுதான். எனவே, அதைப் பற்றி மிகவும் உணர்ச்சிவசப்படத் தேவையில்லை. நாங்கள் விளையாடும் விதம் மற்றும் களத்தில் அதை வெளிப்படுத்தும் விதம்தான் முக்கியம். வரும் அணிகளுக்கு எதிராக வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று நம்புகிறோம்" என்றார்.



துணை கேப்டன் பேட்டி 


இந்திய துணைக் கேப்டனும் மிட்ஃபீல்டருமான ஹர்திக் சிங், அரையிறுதியில் ஜப்பானுக்கு எதிராக அதிக கோல்களைப் பெற அதிக பொறுமை தேவை என்று குறிப்பிட்டார். “எங்கள் கடைசி ஆட்டம் நன்றாக இருந்தது. நாங்கள் எந்த கோல்களையும் பாகிஸ்தானுக்கு எதிராக விட்டுக்கொடுக்கவில்லை, இது ஒரு நல்ல விஷயம். வரும் போட்டிகளிலும் இதே வேகத்தை வெளிப்படுத்துவோம் என எதிர்பார்க்கிறோம். ஆனால் ஜப்பான் உடனான ஆட்டத்தில் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். நாங்கள் அவர்களை சிறந்த அணியாகக் கருதுகிறோம். விளையாட்டின் டெம்போவை நாம் அமைக்க வேண்டும். அது மிகவும் அவசியம். அணியின் மீதான நம்பிக்கை தற்போது மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளது. நாங்கள் இப்போது எந்த அணிக்கு எதிராக இருந்தாலும், அது ஆஸ்திரேலியாவாக இருந்தாலும், நாங்கள் அதே மனநிலையுடன் இருப்போம்,” என்று பிடிஐயிடம் தெரிவித்தார். ரவுண்ட் ராபின் லீக் சுற்றில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் 1-1 என சமநிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.