6 மாத குழந்தைகள் முதல் 60 வயது முதியவர் வரை உண்ண ஏதுவான மருத்துவ குணமும்  கொண்ட  மட்டிப்பழத்திற்கு புவிசார்குறியீடு - வாழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ,மட்டி வாழை விவசாயத்தை ஊக்குவித்து பெருக்க அரசும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.




கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் , தென்னை மற்றும் ரப்பர் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வாழை விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது , சுமார் 7 ஆயிரம் ஹெ்டேர் பரப்பில் , ஏத்தன் , செவ்வாழை , மட்டி , சிங்கன் , ரஸ்தாளி உள்ளிட்ட 18 வகையான வாழை மரங்கள் பயிரிடப்பட்டு வருகிறது இதில் குறிப்பாக மணமும்,  சுவையும் கொண்ட மட்டி வாழைப்பழம் கன்னியாகுமரி மாவட்ட சிறப்புகளில் ஒன்று. மற்ற வாழைப்பழங்களை விட சிறியதாக இருந்தாலும் அதன் மருத்துவ குணமும், மகத்துவமும் அளப்பரியது. எத்தனைப் பழம் சாப்பிட்டாலும் திகட்டாத சுவை கொண்ட இந்த பழத்தில் புளிப்புச் சுவை மற்றும் தேன் போன்ற இனிப்பு சுவை தனிச் சிறப்பு.




கன்னியாகுமரி மாவட்டத்தின் காலச்சூழ்நிலையும், மண் வாகும் மட்டி வாழை செழித்து வளர வழிவகை செய்கிறது. இந்த மட்டிப்பழம்  குழந்தைகள் பிறந்த ஆறு மாதத்தில் இருந்தே கொடுக்கலாம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய இந்த பழம் 60 வயது முதியவர் வரை உண்ண ஏதுவான பழம், நல்ல சத்துகள் நிரம்பியது என்பதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.  வாழைப்பழத்தை வீட்டில் வைத்திருந்தாலே கமகமவென மணம் வீசும். மற்ற வாழைகள் பத்து மாதத்தில் பலன்தரும், ஆனால் மட்டி வாழைகள் 12 மாதங்களில்தான் விளைந்து பலன் கொடுக்கும். பராமரிப்பு காலம் அதிகம், எல்லா சமயத்திலும் சரியான விலை கிடைக்காது என்பதால் விவசாயிகள் மட்டி சாகுபடி அதிகமாகச் செய்வது கிடையாது. ஆனாலும் மாவட்டத்தில் பரவலாக மட்டி வாழை ஒரு சில இடங்களில் பயிரிடப்படுகிறது.




மலையோர பகுதிகளில் அதிகமாக  மலை மட்டி, செம்மட்டி, தேன் மட்டி பயிரிடப்படுகிறது, தேன் மட்டி நல்ல இனிப்பா இருக்கும். செம்மட்டி பழம் சிவப்பு நிறத்தில இருக்கும், நல்ல மருத்துவ குணம் உள்ளது. சுவை இருக்காது. கொய்யா பழத்தின் சுவையும், மணமும் இருக்கும். ஆனால்  தேன்ல போட்டு குழந்தைகளுக்கு கொடுத்தா ரொம்ப நல்லது. மலை மட்டி காய் நீளமா இருக்கும். மட்டிப்பழம் கன்னியாகுமரி மாவட்டத்தில கிடைக்கிற ஸ்பெஷல் இனம் ஆகும். 




இந்த மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைப்பது வாழை விவசாயிகளிடம்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் இங்குள்ள மண் வளத்தை போல் மற்ற இடங்களில் மட்டி வாழை பயிரிட தகுந்த சூழல் இல்லாமல் இருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டி வாழையின்  மகசூலை பெருக்கும் விதமாக இந்த விவசாயத்தை ஊக்குவித்து பெருக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் , மட்டி ரக வாழை கன்றுகள் அதிக அளவில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.