ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டி வருகின்ற அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் பிரமாண்டமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 


இந்திய அணி தனது முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், ஒருநாள் உலகக் கோப்பைக்கான டிக்கெட் முன்பதிவு எப்போது தொடங்கும் என்பது குறித்து ஐசிசி தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட ட்வீட்டில், “ஆகஸ்ட் 25 முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இந்திய அணி விளையாடும் போட்டிகளை தவுர அனைத்து அணிகளின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரத்தில், இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் தொடங்கும். அதன் அடிப்படையில், கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய அணியின் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ஆகஸ்ட் 30 முதல் முன்பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து, “ஆகஸ்ட் 31ம் தேதி முதல் சென்னை, டெல்லி மற்றும் புனேயில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்களையும், செப்டம்பர் 1 முதல் தரம்ஷாலா, லக்னோ மற்றும் மும்பையில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






செப்டம்பர் 2ம் தேதி முதல் பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் நடைபெறும் போட்டிகளுக்கும், செப்டம்பர் 3ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டிக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி சென்னையில் விளையாடும் முதல் போட்டிக்கு பிறகு, அணி அக்டோபர் 11-ம் தேதி டெல்லி மைதானத்தில் ஆப்கானிஸ்தானையும்,  அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தான் அணியையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தியா - வங்கதேசம் இடையிலான ஆட்டம் புனேவில் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, இந்திய அணியின் போட்டி அக்டோபர் 22ஆம் தேதி தர்மசாலாவிலும், 29ஆம் தேதி லக்னோவிலும் நடைபெறவுள்ளது. 






டிக்கெட்டுகள் பின்வரும் தேதிகளில் முன்பதிவு செய்யலாம்..


ஆகஸ்ட் 25 - இந்தியா அல்லாத பயிற்சி போட்டிகள் மற்றும் அனைத்து இந்தியா அல்லாத நிகழ்வுகள்
ஆகஸ்ட் 30 - இந்திய அணி போட்டிகள் (கவுகாத்தி மற்றும் திருவனந்தபுரம்)
ஆகஸ்ட் 31 - இந்திய அணி போட்டிகள் ( சென்னை, டெல்லி மற்றும் புனே)
செப்டம்பர் 1 - இந்திய அணி போட்டிகள் (தரம்சாலா, லக்னோ மற்றும் மும்பை)
செப்டம்பர் 2 – இந்திய அணி போட்டிகள் (பெங்களூரு மற்றும் கொல்கத்தா)
செப்டம்பர் 3 - இந்திய அணி போட்டி (அகமதாபாத் - இந்தியா vs பாகிஸ்தான்)
செப்டம்பர் 15 - அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி