உலகக் கோப்பை தோல்வி தற்போது வரை வலிப்பதாக இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் வேதனைபட தெரிவித்துள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.


இந்திய அணி தோல்வி:


கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பையில் இந்திய அணி தன்னுடைய முதல் லீக் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகத்தான் விளையாடியது. அதன்படி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் லீக் போட்டியிலேயே ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. அப்போது தொடங்கிய இந்திய அணியின் வெற்றி நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டி வரை நீடித்தது.


ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையின் அருகில் சென்றது. தொடர் வெற்றிகளை சுவைத்த இந்திய அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்றும், 3 வது முறையாக இந்திய அணியின் வசம் உலகக் கோப்பை வரும் என்று ரசிர்கள் காத்திருக்க, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயம் நொறுங்கும் வண்ணம் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது இந்திய அணி.


உலக சாம்பியன்: 


அதன்படி, குஜராத் மாநிலம் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6-விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் 6 வது முறையாக உலகக் கோப்பையை வென்ற அணி ஆஸ்திரேலியா என்ற பெருமையை பெற்றது.






அப்போது, இந்திய வீரர்கள் சோகத்தில் மூழ்க ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது சிராஜ் ஆகியோர் கண்கலங்கினார்கள். போட்டி முடிந்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி வீரர்களின் ஓய்வு அறைக்கு சென்று ஆறுதல் கூறினார்.


இன்னும் வலிக்கிறது:



இந்நிலையில், தான் உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்து நான்கு நாட்கள் கடந்த நிலையிலும் இன்னும் அந்த தோல்வியில் இருந்த மீளாத கே.எல். ராகுல் இன்று (நவம்பர் 23) தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.


அதில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் சோகத்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து, இன்னும் வலிக்கிறது என்று கூறியுள்ள அவர் இதயம் நொறுங்கும் எமோஜியை பகிர்ந்துள்ளார். தற்போது கே.எல்.ராகுலின் இந்த பதிவு சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதனிடையே, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சிலர்” வருத்தப்பட வேண்டாம். இந்த முறை நீங்கள் அனைவரும் நன்றாக விளையாடினீர்கள்” என்றும், “எப்போதும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம்” என்பது போன்ற கருத்துகளை பகிர்ந்து ஆறுதல் கூறிவருகின்றனர். இச்சூழலில், தான் இன்று (நவம்பர் 23) கேரளாவில் உள்ள விசாகப்பட்டிணத்தில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Rohit - Virat Kohli: ”அடுத்த டி20 உலகக்கோப்பையிலும் ரோகித், விராட் கோலி ஆட வேண்டும்” - கெளதம் கம்பீர் ஆசை


 


மேலும் படிக்க: Marlon Samuels Ban: ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய சாம்வேல்ஸ் 6 ஆண்டுகள் விளையாட தடை - ஐ.சி.சி. அதிரடி