எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மார்லன் சாமுவேல்ஸ் அனைத்து கிரிக்கெட்டிலும் விளையாட 6 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளார். இந்த 6 ஆண்டுகள் தடையானது நவம்பர் 11, 2023 முதல் தொடங்கியதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது.
சாமுவேல்ஸ் இந்த ஆண்டு ஆகஸ்டில் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் 2021 இல் நான்கு பிரிவுகளில் ஐசிசியின் குற்றச்சாட்டிற்கு ஆளானார். குற்றச்சாட்டுகள் 2019 இல் அபுதாபி T10 தொடர்பானது, அங்கு அவர் கர்நாடக டஸ்கர்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- விதிமுறை 2.4.2 - பங்கேற்பாளருக்கு அல்லது கிரிக்கெட் விளையாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட எந்தவொரு பரிசு, பணம் அல்லது பிற நன்மைகளின் ரசீது, நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரிக்கு வெளிப்படுத்தத் தவறியுள்ளார். அதாவது ஆட்டநாயன், தொடர் நாயகன் போன்ற விருதுகளுடன் கொடுக்கப்படும் காசோலைகளை அணி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவில்லை.
- விதிமுறை 2.4.3 - அமெரிக்க மதிப்பில் 750 டாலர் அல்லது அதற்கும் அதிகமான மதிப்புடைய அதிகாரபூர்வ ரசீதை, ஊழல் எதிர்ப்பு அதிகாரியிடம் வெளிப்படுத்தத் தவறியது.
- விதிமுறை 2.4.6 - நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தவறியது.
- விதிமுறை 2.4.7 - விசாரணைக்கு தொடர்புடையதாக இருக்கக்கூடிய தகவல்களை மறைப்பதன் மூலம் நியமிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரியின் விசாரணையைத் தடுப்பது அல்லது தாமதப்படுத்துவது.
மேற்குறிப்பிட்டுள்ள நான்கு குற்றச்சாட்டு விதிமுறைகளின் படி சாமுவேல்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர் 71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதங்களும் 24 அரைசதங்களும் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 260. அதேபோல் ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் 207 போட்டிகளில் விளையாடி 196 போட்டிகளில் பேட்டிங் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். அதில் அவர் 10 சதங்கள் 30 அரைசதங்கள் உட்பட மொத்தம் 5 ஆயிரத்து 606 ரன்கள் சேர்த்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் சேர்த்ததுதான். மேலும் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை இவர் 67 போட்டிகளில் விளையாடி 65 போட்டிகளில் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார். இதில் சாமுவேல்ஸ் 10 அரைசதங்கள் உட்பட ஆயிரத்தை 611 ரன்கள் சேர்த்துள்ளார். டி20 போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் சேர்த்ததுதான்.