ரோகித் சர்மாவை கேப்டனாக பார்க்க விரும்புவதாகவும், விராட் கோலி மற்றும் ரோகித் இருவரும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.


டி20 போட்டிகள்:


நடப்பு உலகக் கோப்பையில் தொடர்ந்து 10 போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் உற்சாகம் அடைந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையை எப்படியும் வென்றுவிடும் என்று காத்திருந்தனர்.


இதனிடையே, கடந்த நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வி இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. மைதானத்தில் இருந்த இந்திய கேப்டன் ரோகித், விராட், முகமது சிராஜ் உள்ளிட்டோர் கண்கலங்கினர்.


இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களிலும் வைரலானது. இந்நிலையில் தான், தோல்வியின் சோகத்தில் இருந்து இன்னும் மீளாத இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடனான 5 தொடர்களைக் கொண்ட டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அதன்படி, இன்று (நவம்பர் 23 ) நடைபெறும் முதல் டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.


ரோகித்தும், கோலியும் டி20-ல விளையாடனும்:


இந்த டி20 போட்டிகளில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, கே.எல்.ராகுல், உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகக் கோப்பை தொடரில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தான் இந்திய அணியின் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர், ”டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாட வேண்டும்” என்று தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.


இது தொடர்பாக கெளதம் கம்பீர் பேசுகையில்,” ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இரண்டு முன்னணி வீரர்களும் டி20 போட்டிகளில் விளையாட வேண்டும். அதோடு மட்டும் இன்றி டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவைத்தான் கேப்டனாக பார்க்க விரும்புகிறேன். ஆனால், தற்போது டி20 போட்டிகளில் கேப்டனாக ஹர்திக் பாண்டிய தான் செயல்பட்டு வருகிறார்.


டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா கேப்டனாக வேண்டும் என்பதே எனது ஆசை. ரோகித் சர்மாவை ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டாம். ரோகித் சர்மா ஒரு அற்புதமான கேப்டன். இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பையில் அவர் ஒரு திறமையான கேப்டன் மற்றும் பேட்ஸ்மேன் என்பதை அனைவரிடமும் நிரூபித்துள்ளார். பேட்டிங் செய்யக் கூடிய ஒரு கேப்டனாகவும் அவர் செயல்படுவார். அதேபோல், தான் விராட் கோலியும். அவரை தேர்ந்தெடுப்பதும் சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார் கெளதம் கம்பீர்.