பாஜகவுக்கு எதிராகவும் அதானி குழுமம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தேசிய அளவில் தொடர் பரபரப்பை கிளப்பி வருகிறது. மொய்த்ரா, தன்னிடம் லஞ்சம் பெற்று கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியதாக மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனி கடிதம் எழுதினார்.


மோடிக்கு எதிராக கேள்விகளை எழுப்ப லஞ்சம் பெற்றாரா மொய்த்ரா?


இந்த விவகாரத்தில் மொய்த்ராவுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பான ஆதாரங்களை நிஷிகாந்த் துபேவிடம் அளித்த மொய்த்ராவின் முன்னாள் காதலரும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான ஜெய் ஆனந்த் தேஹாத்ராய், மொய்த்ராவுக்கு எதிராக சிபிஐயிடம் புகார் அளித்தார். 


இரு தரப்பையும் அழைத்து, மக்களவை நெறிமுறைகள் குழு, விசாரணை நடத்தியது. இறுதியில், மக்களவையில் இருந்து மொய்த்ராவை சஸ்பெண்ட் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரைத்தது. மொய்த்ரா தரப்பில் விளக்கம் அளிக்க போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.


இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்ததில் இருந்தே திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, அமைதி காத்து வந்தார். இந்த நிலையில், முதல்முறையாக இதுகுறித்து பேசியுள்ளார்.


"மொய்த்ராவை வெளியேற்ற சதி திட்டம்"


கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொய்த்ராவுக்கு ஆதரவாக பேசிய அவர், "மொய்த்ராவை மக்களவையில் இருந்து வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இது 2024 பொதுத் தேர்தலுக்கு முன் அவருக்கு உதவும். தற்போது எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கும் மத்திய விசாரணை அமைப்புகள் 2024 தேர்தலுக்கு பின் பாஜகவை குறிவைக்கும். மத்தியில் உள்ள அரசுக்கு இன்னும் மூன்று மாதம்தான் உள்ளது" என்றார்.


இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்களும் அமைதி காத்து வந்தனர். ஆனால், கடந்த நவம்பர் 9ஆம் தேதி, மொய்த்ராவுக்கு ஆதரவாக பேசிய கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி, "நெறிமுறைக் குழுவின் அறிக்கையை நான் படித்ததிலிருந்து, அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 


ஆனால், மொய்த்ராவுக்கு எதிராக உங்களிடம் எதுவும் இல்லை என்றால் அது விசாரணைக்கு உட்பட்டது என்றால், ஏன் அவரை சஸ்பெண்ட் செய்ய  பரிந்துரைக்க வேண்டும்? மொய்த்ரா, தன் போர்களை தன்னந்தனியாக எதிர்த்துப் போராடும் அளவுக்குத் திறமையானவர் என்று நான் உணர்கிறேன். நான்கு வருடங்களாக என்னையும் (பா.ஜ.க.) பலிகடா ஆக்குகிறார்கள். அது அவர்களின் வழக்கமான நடைமுறை" என்றார்.