ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் சுற்றுகள் முடிவடைந்து நாக்அவுட் சுற்று போட்டிகள் இன்று தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் நடப்புச் சாம்பியன் இந்திய அணி பெல்ஜியம் அணியை எதிர்த்து விளையாடியது. கடந்த 2016ஆம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் விளையாடின. அதில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆகவே இன்றைய போட்டியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. 


இந்நிலையில் இன்றைய போட்டியில் தொடக்கத்தில் பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தியது. எனினும் ஆட்டத்தின் இரண்டாவது கால் பாதியில் இந்திய அணியின் திவாரி பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து மூன்றாவது மற்றும் நான்காவது கால்பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இறுதியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 






அத்துடன் வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். ஜூனியர் உலகக் கோப்பை தொடரை ஜெர்மனி அணி அதிகபட்சமாக 6 முறை வென்றுள்ளது. ஜெர்மனிக்கு அடுத்த இந்தத் தொடரை இந்திய அணி இரண்டு முறை வென்றுள்ளது. ஆகவே அரையிறுதி போட்டி பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறை இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறும். 


ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை 1979ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 11 ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் இந்திய அணி 2001 ஆம் ஆண்டு அர்ஜென்டினா  அணியை 6-1 என்ற கணக்கில் வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதன்பின்னர்  15 ஆண்டுகளுக்கு பிறகு 2016ஆம் ஆண்டு இந்திய அணி பெல்ஜியம் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. அதற்கு முன்பாக 1997ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வி அடைந்தது. ஆகவே தற்போது வரை இந்திய அணி மூன்று முறை ஜூனியர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதில் 2 முறை வெற்றியும் ஒரு முறை தோல்வியையும் சந்தித்துள்ளது. 


மேலும் படிக்க: பேட்மிண்டன் உலக டூர் ஃபைனல்ஸ் 2021: வெற்றியுடன் துவக்கிய பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த் !