தல என்ற வார்த்தையை சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் அஜித். அதுவே ஸ்போர்ட்ஸ் பக்கம் சென்றால் தல என்ற அன்புக்குள் வந்தார் தோனி. குறிப்பாக ஐபிஎல்-க்கு பிறகு தோனியை தல தல என கொண்டாடித் தீர்த்தனர் சென்னை ரசிகர்கள். தல என்ற செல்லப்பெயரை தோனியும் ரொம்பவே விரும்புவார். தன்னை தல தல என்று அழைக்கும்போது ஒரு வித அன்பை உணர்வதாகவும், அது தமிழ்நாட்டின் அன்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல சமயம் தோனியின் மனைவியே தல தல என தோனியைக் கொஞ்சும் வீடியோக்களும் வைரலாகியுள்ளன. ஆனாலும் இந்த தல பெயரால் ட்விட்டரில் சில சம்பவங்கள் நடப்பதும் உண்டு. தல தல என தோனியை அதிகம் புகழ்வதும், ஒரே தல அது தோனிதான் என சில ரசிகர்கள் பதிவிடுவதும் ரசிகர்கள் சண்டையை உண்டாக்கியது. தல என்றால் அது தோனி என சிலர் பதிவிடுவதும், தளபதி என்றால் அது முதலமைச்சர் ஸ்டாலின் தான் என சிலர் பதிவிடும் என ட்விட்டர் சில நேரங்களில் ரத்தக் களறி ஆகும். இது இப்படி இருக்க தல என்ற பட்டம் வேண்டாமென இன்று அறிக்கை விடுத்துள்ளார் அஜித்குமார்.
ரசிகர்களின் சோஷியல் மீடியா சண்டைக்கும் அஜித்தில் அறிக்கைக்கும் தொடர்பு இல்லை என்றாலும் அஜித்தின் அறிக்கை ட்விட்டரில் தோனியை ட்ரெண்டாக்கி வருகிறது. அஜித் தன் தல படத்தை துறந்ததால் இனி தமிழ்நாட்டின் தல தோனிதானா என பலரும் பதிவிட்டு வருகின்றனர். தல என்ற பட்டத்தை திறந்தாலும் அந்த வார்த்தையை என்றுமே நினைவூட்டுபவர் அஜித்தாகத்தான் இருப்பார் என சில ரசிகர்கள் பதிவிட்டும் வருகின்றனர்.
முன்னதாக தல என்று அழைக்க வேண்டாமென அஜித்குமார் அறிக்கை விடுத்தார். அதில்
பெரும் மரியாதைக்குரிய ஊடக, பொது ஜன மற்றும் என் உண்மையான ரசிகர்களுக்கு,இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும் போதோ, என்னை பற்றி குறிப்பிட்டு பேசும் போதோ என் இயற் பெயரான அஜித் குமார், மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது. தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறேன்.உங்கள் அனைவரின் ஆரோக்கியம், உள்ள உவகை, வெற்றி,மன அமைதி, மன நிறைவு உள்ளிட்ட சகலமும் கிடைக்க வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.