இந்த ஆண்டின் கடைசி பேட்மிண்டன் தொடரான பிடபிள்யூஎஃப் உலக டூர் ஃபைனஸ் தொடர் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, ஶ்ரீகாந்த், லக்‌ஷ்யா சென், சத்விக்சாய்ராஜ்-சிராக் செட்டி ஜோடி மற்றும் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 


முதலில் குரூப் பிரிவு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இன்று முதலில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஶ்ரீகாந்த் பிரான்சு நாட்டின் டாம் யங்கை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் தொடக்க முதலே இந்திய வீரர் ஶ்ரீகாந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இறுதியில் 21-14,21-16 என்ற கணக்கில் ஶ்ரீகாந்த் போட்டியை வென்றார். 






இதைத் தொடர்ந்து மகளிர் ஒற்றையர் பிரிவு குரூப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து டென்மார்க் வீராங்கனை லைன் கிறிஸ்டோபர்செனை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை 21-14 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் இரண்டாவது கேமில் இரு வீராங்கனைகளும் சற்று மாறி மாறி புள்ளிகளை பெற்று வந்தனர். இறுதியில் 21-16 என்ற கணக்கில் சிந்து இரண்டாவது கேமை வென்றார். அத்துடன் 38 நிமிடங்களில் 21-14,21-16 என்ற கணக்கில் பி.வி.சிந்து இந்தப் போட்டியை வென்றார். 


குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள பி.வி.சிந்து முதல் போட்டியில் டென்மார்க் வீராங்கனையை வென்றுள்ளார். அதன்பின்னர் அடுத்து நடைபெற போட்டியில் ஜெர்மனி வீராங்கனை யுவோன் லீயை எதிர்த்து விளையாடுகிறார். அதைத் தொடர்ந்து தாய்லாந்து வீராங்கனை பொன்பாவி சோசுவாங்கை எதிர்த்து விளையாட உள்ளார். ஆகவே அடுத்த இரு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் கூட சிந்து அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 






பேட்மிண்டன் உலக டூர் ஃபைனல்ஸ் போட்டி 2018ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கு இதற்கு முன்பாக இந்தியாவிலிருந்து பி.வி.சிந்து,சாய்னா நேவால்,ஶ்ரீகாந்த், சமீர் வர்மா ஆகியோர் தகுதி பெற்று விளையாடியுள்ளனர். அதில் சிந்து 2018ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றார். ஶ்ரீகாந்த் மற்றும் சமீர் வர்மா நாக் அவுட் சுற்றுக்கு மட்டும் முன்னேறியுள்ளனர். அவர்கள் இருவரும் அரையிறுதி அல்லது இறுதி போட்டிக்கு முன்னேறியதில்லை. 


 மேலும் படிக்க: அதே பெயர்... ஒரே ஒரு கையெழுத்து... மாஸ் வீடியோவில் மஞ்சள் ஆர்மியில் தொடரும் நான்கு சிங்கங்கள்!