2021ம் ஆண்டுக்கான நீட் மருத்துவத் தேர்வுகள் முடிந்த நிலையில் இந்த மூன்று நாட்களில் மட்டும் மூன்று மாணவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அச்சத்தால் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இதையடுத்து தமிழ்நாட்டின் நீட் மரணங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே இதுகுறித்து நேரலையில் பேசியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மாணவர்கள் மனநல உதவிக்கு அரசின் 104 என்கிற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளும்படியும் தயவுசெய்து உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டாம் என்றும் கெஞ்சும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

  


தற்கொலை எதற்கும் தீர்வில்லை.உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு எண் 104 ஐ அழைக்கவும்






'கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்தபோது இருந்த மனநிலைதான் இப்போதும். நேற்று முன்தினம் மாணவர் தனுஷ் இறந்தபோது இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என மாணவர்களை வேண்டிக்கொண்டேன்.ஆனால் நேற்று அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழி இறந்துபோனார்.இன்று வேலூரைச் சேர்ந்த சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார். இந்தச் செய்தியை கேட்டதும் சுக்கல் நூறாக உடைந்தேன். இந்த வேதனையை விட இனி இப்படியொரு சம்பவம் நடக்கக் கூடாது என்கிற அச்சம்தான் அதிகமாக இருக்கிறது.பலதலைமுறைகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமைதான் தற்போது கொஞ்சமேனும் கிடைத்திருக்கிறது.அதையும் தடுக்கவே நீட் தகுதித் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.படிப்பதற்குத் தகுதி தேவையில்லை.படித்தால் தன்னால் தகுதி வந்துவிடும்.பல குளறுபடிகளைக் கொண்ட நீட் தேர்வு ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கனவை நாசமாக்குகிறது. திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த அநீதித் தேர்வுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. அதிமுகவுக்கு முன்பு திமுக ஆட்சியில் இருந்தபோதும் இந்த தேர்வைத் தமிழ்நாட்டில் விடவில்லை. ஆனால் சிலர் தங்களது சுயலாபத்துக்காக நீட் தேர்வை தமிழ்நாட்டில் அனுமதித்தார்கள். தற்போதும் அதே சுயலாபத்துக்காக அவர்கள் பல பொய்யான பரப்புரைகளை மேற்கொள்கிறார்கள். மருத்துவராகும் லட்சியத்தோடு இருக்கும் கனவைச் சிதைப்பதுதான் நீட். ஆனால் ஒன்றிய அரசு இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நீட் தேர்வு ரத்து தொடர்பாக ஆணையம் அமைத்தது. ஒருசிலர் தவிர ஒருலட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு வேண்டாம் என ஆணையத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தார்கள். ஆணையத்தின் அறிக்கையை ஏற்று பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் தகுதியின் அடிப்படையிலேயே மருத்துவம் படிக்கலாம் அதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் எனத் தீர்மானம் இயற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லையே என உயிரை மாய்த்துக் கொள்வது என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவது போல இருக்கிறது. உங்கள் உயிர் விலை மதிப்பில்லாதது. உங்கள் உயிர் உங்கள் வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் முக்கியமானது.உங்கள் எதிர்காலம்தான் நாட்டின் எதிர்காலம். உங்களால் மருத்துவராக முடியும்.உங்களால் நினைத்ததை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியும். அந்தத் தன்னம்பிக்கையுடன் அனைவரும் படியுங்கள்.கல்வியில் மட்டுமல்ல தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதராக வளர்ந்திடுங்கள்.இதுதான் விதி என எதுவும் இல்லை. விதியை மதியால் வெல்ல முடியும்.முயற்சிதான் வெற்றி என்றார் திருவள்ளுவர். அத்தகைய முயற்சியும் தன்னம்பிக்கையுடனும் நமது மாணவர்கள் வாழவேண்டும்.நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்கிற உதவி எண் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மனநல ஆலோசகர்கள் எப்போதும் இருப்பார்கள். பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு அழுத்தம் தரவேண்டாம். அரசு மற்றும் திரைத்துறையினர் மாணவர்களுக்கு ஊக்கம்தரும் வகையில் இயங்க வேண்டும். தயவு செய்து..தயவு செய்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் என மாணவ மாணவிகளை மீண்டும் மீண்டுமாகக் கேட்டுக்கொள்கிறேன்’  இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

தற்கொலை எதற்கும் தீர்வில்லை.உங்கள் உயிர் விலைமதிப்பில்லாதது. நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் அரசு எண் 104 ஐ அழைக்கவும்