ஐ.பி.எல் சீசன் 17:
சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல். லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானது. அந்த அளவிற்கு ஐ.பி.எல். போட்டிகளில் சுவாரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறது. அதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் கவனிக்க வேண்டிய சிறந்த ஆஸ்திரேலிய வீரர்கள் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ட்ராவிஸ் ஹெட்:
இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர் ட்ராவிஸ் ஹெட். முக்கியமாக இந்திய அணிக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தனி ஒரு நபராக களத்தில் நின்று 120 பந்துகளில் 137 ரன்கள் விளாசி ஆஸ்திரேலிய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரூபாய் 6.80 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக டெல்லி டேர்டவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள ட்ராவிஸ் ஹெட் இந்த முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு விளையாட உள்ளார். உலகக் கோப்பை தொடரில் விளையாடியதை போல் இந்த முறை ஐபிஎல் தொடரிலும் அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரூன் க்ரீன்:
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் - ரவுண்டர் கேமரூன் க்ரீன். ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய கேமரூன் க்ரீன் இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாட உள்ளார். அதன்படி, ரூபாய் 17.5 கோடிக்கு பெங்களூரு அணி இவரை ஏலத்தில் எடுத்து இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் என்பதால் இவரின் தேவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கண்டிப்பாக உதவும் என்பது முக்கியமானது.
ஸ்பென்சர் ஜான்சன்:
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன். ஐ.பி.எல் தொடரில் இந்த ஆண்டு தான் அறிமுக வீரராக களம் இறங்க உள்ளார். அதன்படி, கடந்த ஆண்டு ரன்னர் அப் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணி ஸ்பென்சன் ஜான்சனை ரூபாய் 10 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. முதன் முறையாக ஐபிஎல் தொடரில் களம் காண இருக்கும் ஜான்சன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.
பாட் கம்மின்ஸ்:
இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் உலகக் கோப்பை கனவை கனவாகவே ஆக்கியவர் பாட் கம்மின்ஸ். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ரசிகர்களை மைதானத்தில் அமைதியாக இருக்க வைப்போம் என்ற சொன்னார். சொன்னதை அப்படிச் செய்தார். உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு 6 வது முறையாக கோப்பையை வென்று கொடுத்தார். இதனால், ஐபிஎல் தொடரில் இவரின் மீது எதிர்பார்ப்பு எகிறியது. அந்தவகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இவரை ரூபாய் 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அந்த அணியின் கேப்டனாகவும் நியமித்து இருக்கிறது. உலகக் கோப்பையை வென்று கொடுத்ததைப்போல் இந்த முறை ஐபிஎல் கோப்பையை சன்ரைசர்ஸ் அணிக்கு பெற்றுக்கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மிட்செல் ஸ்டார்க்:
ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியவர். இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரூபாய் 24.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அதன்படி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையையும் பெற்றார் மிட்செல் ஸ்டார்க். உலகக் கோப்பை தொடரில் 65 விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியினரை மிரட்டிய மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரிலும் பேட்டர்களை மிரட்டுவார் என்பது உறுதி என்கின்றனர் ரசிகர்கள்.
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!
மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!