சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2023 இன் 58வது போட்டியின் இறுதி ஓவருக்கு முந்தைய ஓவரில், அவேஷ் கான் வீசிய ஃபுல் டாஸ் பந்து தொடர்பான சர்ச்சைக்குரிய முடிவிற்குப் பின், லக்னோ அணி வீரர்கள் அமர்ந்திருந்த டக்அவுட்டில் ரசிகர்கள் நட்டுகள் மற்றும் போல்ட்களை எறிந்தது சற்று நேரம் ஆட்டத்தை இடைமறித்தது.


சர்ச்சையான முடிவு


பந்து முதலில் ஆன்-பீல்ட் நடுவர்களால் நோ-பால் என்று தீர்மானிக்கப்பட்டது, ஆனால் LSG முடிவை மறுபரிசீலனை செய்தபோது மூன்றாவது நடுவரால் அது சரியான பந்தாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரிப்ளேவில் பார்க்கும்போது பந்து இடுப்பிற்கு மேலேயும், ஸ்டம்பிற்கு மேலேயும் கடந்து செல்வது தெளிவாக தெரிந்தது. ஆனாலும் மூன்றாவது நடுவர் அதுபோன்ற முடிவை அளித்ததற்கு சன்ரைசர்ஸ் அணி ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். அதனால் அவர்களுக்கு கையில் கிடைத்து போல்ட் மற்றும் நட்டுகளை கழற்றி லக்னோ அணி வீரர்கள் அமர்ந்திருந்த டக்கவுட் மீது வீசியுள்ளனர். 










இடைநிறுத்தப்பட்ட போட்டி


இதையடுத்து, நடுவர்களுக்கும், இரு நிர்வாகங்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டது. லக்னோ டக்அவுட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கையாளும் போது, லக்னோ பயிற்சியாளர் ஆண்டி ஃப்ளவர் நடுவிரலைக் காட்டியதும் பெரிய பிரச்சினை ஆனது. கூட்டத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக LSG துணைப் பணியாளர்கள் சிலர் மைதானத்திற்கு வெளியே வர வேண்டியிருந்ததால், விளையாட்டின் போது பொலிஸ் தலையீடும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்: RR vs RCB IPL 2023: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பெங்களூரு? பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா ராஜஸ்தான்? ஒரு பார்வை!


கோலி கோலி என்று கத்திய ரசிகர்கள்


நிலைமையை சீர்செய்தாலும், ரசிகர்களின் ஆக்ரோஷத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் லக்னோ அணி இயக்குனர் கம்பீரை கடுப்பேத்துவதற்காக திடீரென "கோலி… கோலி…" என்று கத்த ஆரம்பித்தனர். இது நிலைமையை மேலும் சுவாரஸ்யமாக மாற்றியது. பின்னர், SRH இன் இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த, ஹென்ரிச் கிளாசென் பேசுகையில் கூட்டத்தின் இத்தகைய செயல்களை 'ஏமாற்றம்' என்று குறிப்பிட்டார். அதே நேரத்தில் இடையூறும் ஏற்பட்டதால், SRH இன் ரன் வேகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டதை வெளிப்படுத்தினார்.










பீச் குடைகள் வைத்துள்ளனர்


ஹைதராபாத் கிரிக்கெட் கிளப் போதிய டக்அவுட் பாதுகாப்பை அளிக்காததால் மூத்த வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக சாடியுள்ளார். இதனால் இந்த சர்ச்சை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அணிகளுக்கு போதுமான பாதுகாப்பை வழங்காததற்காக ஹைதராபாத் கிரிக்கெட் கிளப்பை சாடினார். இன்று பெரும்பாலான மைதானங்கள் டக்கவுட்களுக்கு ஃப்ளெக்சி-கிளாஸ்கள் போட்ட கூரை அமைத்துள்ளனர், ஆனால், ஹைதராபாத்தில் பீச்சில் வைக்கும் குடையை மட்டுமே வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். "இதில் என்னால் புரிந்து கொள்ள முடியாதது என்னவென்றால், பெரும்பாலான மைதானங்கள் ஃப்ளெக்ஸி-கிளாஸ் கொண்ட கூரை அளிக்கின்றனர். ஆனால் இங்கே நம்மிடம் பீச்சில் வைக்கும் குடை மட்டுமே உள்ளது, இது பாதுகாப்பற்றது. ஹைதராபாத் கிரிக்கெட் கிளப் இதனை சீரியசாக எடுத்து இதனை சரி செய்ய வேண்டும்," என்று கவாஸ்கர் கூறினார்.