ஐபிஎல் தொடரின் இன்றைய 60வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்  மோத இருக்கின்றன. இந்த போட்டியானது ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மன்சிங் ஸ்டேடியத்தில் மதியம் 4 மணிக்கு தொடங்குகிறது. 


இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும். 


ஐபிஎல் 16வது சீசனில் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களான இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஃபாப் டு பிளெசிஸ் இடையேயான போட்டியாகவும் இன்று இருக்கும். ஜெய்ஸ்வால் மற்றும் டு பிளெசிஸ் இருவரும் அட்டகாசமான பார்மில் உள்ளனர். இதுவரை நடந்த போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். டு பிளெசிஸ் 11 இன்னிங்ஸ்களில் 6 அரை சதங்கள் உட்ப 576 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் 4 அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் 575 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். 


இன்றைய போட்டியில் இருவரும் அதிரடி காட்டினால் ரசிகர்களுக்கு விருந்துதான். மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான தோல்விக்கு பிறகு பெங்களூரு அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்கும் முனைப்பில் களமிறங்கும். மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் கடந்த வியாழக்கிழமை நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதே வெற்றிபாதையை தொடர ராஜஸ்தான் முயற்சிக்கும். 


மேலும், ஜாஸ் பட்லர் ஜோ ரூட், ட்ருவ் ஜூரல் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மியர் ஆகியோர் எதிரணிக்கு பயம் காட்டலாம். யுஸ்வேந்திர சாஹல் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவருடன் டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, ரவிச்சந்திரன் அஷ்வின் ஒத்துழைப்பு தரலாம். 


பெங்களூரு அணியை பொறுத்தவரை விராட் கோலியும், மேக்ஸ்வெல்லும் சிறந்த பார்மில் உள்ளனர். இவர்களுடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்றவர்கள் கைகொடுத்தால் பெங்களூரு அணி வெற்றிபெறும்.


முகமது சிராஜ் 11 போட்டிகளில் 15 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிகரமான பந்துவீச்சாளராக உள்ளார். ஜோஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல் மற்றும் விஜய்குமார் வைஷாக் போன்றவர்களின் ஆதரவு சிராஜுக்குத் தேவை.


கணிக்கப்பட்ட அணி விவரம்:  


ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்):


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்& விக்கெட் கீப்பர்), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கே.எம்.ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி):


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, சித்தார்த் கவுல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்