கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது 'women in sports' என்ற கோட்பாட்டை முன்வைக்கும் வகையில் தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.


விளையாட்டில் பெண்கள்


36 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19,000க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் 200 ஸ்பெஷல் சைல்டு-களின் ஆரவாரத்துடன் இந்த போட்டி நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ஜெர்சியை அணிந்து ஆட உள்ளனர். இந்த நிகழ்வானது, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள, அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு (ESA) முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இதற்காக நகரம் முழுவதிலும் உள்ள NGO களில் இருந்து குழந்தைகளை நேரடியாக விளையாட்டைக் காண அழைக்கப்பட்டுள்ளனர். 



பெருமிதம் கொள்ளும் நீதா அம்பானி


MI vs KKR போட்டியானது ESA முன்முயற்சியின் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படவுள்ளது. இந்த முயற்சி குறித்து பேசிய நீதா அம்பானி, "இந்த சிறப்பு போட்டியானது விளையாட்டுகளில் பெண்களின் ஈடுபாட்டை கொண்டாடும் விதமாக இருக்கும். இந்த ஆண்டு முதல் பெண்கள் பிரீமியர் லீக் மூலம் இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முக்கிய தொடக்கம் கிடைத்தது. பெண்களின் கல்வி மற்றும் விளையாட்டுக்கான உரிமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், இந்த ஆண்டுக்கான ESA நிகழ்வை பெண் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறோம்!", என்றார். 


தொடர்புடைய செய்திகள்: Watch Video: கெத்து காட்டிய கோலி… கை கொடுக்காமல் சென்ற கங்குலி… ஜாம்பவான்களிடையே அனல் பறந்த மோதல்..!


WPL ஜெர்சியில் மும்பை அணி 


ரிலையன்ஸ் அறக்கட்டளை இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை நேரலையில் ரசிக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19,000 இளம் பெண்களை வரவழைப்பதில் பெருமிதம் கொள்கிறது என்று மேலும் கூறினார். இது மட்டுமின்றி இன்றைய போட்டியில் விளையாடும் மும்பை அணி வீரர்கள் WPL தொடரில் மும்பை அணி வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஜெர்சியுடன் மும்பை அணியின் திலக் வர்மா நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு மும்பை அணி அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.






பிரம்மாண்ட ஏற்பாடு


பழம்பெரும் முன்னாள் இந்திய பேட்டர் சச்சின் டெண்டுல்கர், தொடக்கத்திலிருந்தே ESA பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இந்த முயற்சியானது கல்வி மற்றும் விளையாட்டு அனுபவங்களை எந்த வகையான குடும்பப் பின்னணியில் இருந்தாலும் எல்லா குழந்தைகளுக்கும் அணுகக்கூடிய வகையில் உத்வேகம் மற்றும் வாய்ப்புகளை வழங்க முயல்கிறது. இந்த 19,000 பேரை ஏற்றிச் செல்ல 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மொத்தம் 500 தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.


1,00,000 உணவுப் பெட்டிகள் மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் சிறப்பு பதிப்பான ESA டி-ஷர்ட்களையும் பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு வான்கடே கான்கோர்ஸில் வரிசையாக இருக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வாய்ப்பும், விளையாட்டின் போது அவர்கள் அவர்களே உருவாக்கும் வாசகம் எழுதிய போர்டையும் காண்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.