ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு இந்த போட்டி வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.


மும்பை - கொல்கத்தா மோதல்:


ஐ.பி.எல். தொடரில் இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ரோகித்சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டுகளிக்கலாம்.


நடப்பு தொடரில் இதுவரை:


நடப்பு தொடரில் மும்பை அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், கடைசியாக விளையாடிய டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.  இதனிடையே, கொல்கத்தா அணி 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.  கடைசியாக ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.


அணிகளின் நிலவரம்:


ரோகித் சர்மா, இஷான் கிஷன், டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோருடன், திலக் வர்மா மற்றும் வதேரா ஆகிய இளம் வீரர்கள் மும்பை அணியின் பேட்டிங் நட்சத்திரங்களாக உள்ளனர். பந்துவீச்சு தான் அந்த அணியின் பெரும் பலவீனமாக கருதப்படுகிறது. கொல்கத்தா அணியிலோ ரிங்கு சிங், ராணா, வெங்கடேஷ் அய்யர் மற்றும் குர்பாஸ் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்க, நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் பந்துவீச்சில் எதிரணிக்கு நெருக்கடி தருகின்றனர்.


மைதான நிலவரம்:


வான்கடே மைதானம் எப்போதும் போன்று பேட்டிங்கிற்கு சாதகமாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி மாலையில் நடைபெறுவதால் பனியின் தாக்கம் பெரிதாக இருக்காது என கருதலாம். ஆனாலும் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தான் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வான்கடே மைதானத்தில் இதுவரை 103 போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. அதில் 48 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்தவர்களும், 55 போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்தவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.


மும்பை உத்தேச அணி:


ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷோக்கீன், கேமரூன் கிரீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான், வதேரா, இஷான் கிஷன், பெஹ்ரண்டோர்ஃப், ரிலே மெரிடித்


கொல்கத்தா உத்தேச அணி:


ராணா, ரிங்கு சிங்,  ரஸ்ஸல், நரைன், குர்பாஸ், நாரயண் ஜெகதீசன், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் சர்மா, பெர்கூசன்