காயத்தால் விலகிய கே.எல். ராகுல், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக பதிவிட்ட இன்ஸ்டகிராம் பதிவு வைரல். இது அவருக்கு செய்யப்படும் இரண்டாவது அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எல்.ராகுல் காயம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல். ராகுல் சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான அணியின் மோதலில் வலது தொடையில் காயம் அடைந்தார். இந்த காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனின் எஞ்சிய ஆட்டத்தில் இருந்து கே.எல்.ராகுல் வெளியேறினார். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியும் ஜூன் 7 முதல் நடைபெற உள்ள நிலையில் அதிலும் அவருக்கு பதில் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவரே வெளியிட்ட அப்டேட்
31 வயதான கே.எல்.ராகுல் மீண்டும் களத்திற்கு திரும்புவதற்கான உறுதியான தேதி இதுவரை கூறப்படாத நிலையில், அவரே இன்ஸ்டாகிராமில், அவரது காயம் குறித்த அப்டேட்டை வழங்கினார். அதில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அது வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார். மேலும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அதோடு, அவர் அதிகாரப்பூர்வமாக மீண்டும் விளையாடும் வகையில் அவரது உடல் நிலையை மீட்கும் பாதையில் இருப்பதாகக் கூறினார்.
வெற்றிகரமாக முடிந்தது
இன்ஸ்டாகிராமில், கே.எல்.ராகுல் வெளியிட்ட பதிவில், "அனைவருக்கும் வணக்கம், நான் எனது அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன். வெற்றிகரமாக முடிந்தது. நான் வசதியாக இருப்பதையும், அனைத்தும் சீராக நடந்ததையும் உறுதிசெய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு நன்றி. நான் அதிகாரப்பூர்வமாக மீண்டும் விளையாட, மீண்டு வருவதற்கான பாதையில் இருக்கிறேன். எனது சிறந்த நிலைக்குத் திரும்பவும், மீண்டும் களத்தில் இறங்கவும் நான் உறுதியாக உள்ளேன்!" என்று எழுதியிருந்தார்.
ராகுல் இல்லாத லக்னோ அணி
கேஎல் ராகுல் இல்லாத நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி பின்னடைவை சந்தித்து வருகிறது. அவர் காயமடைந்து ஐபிஎல் இல் இருந்து வெளியேறிய பின்னர், இரண்டு ஆட்டங்களில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ஸ்ட்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவும் நிலையிலிருந்து மழையால் ஆட்டம் முடிவின்றி முடிக்கபட்டதால் பிழைத்தது. மேலும் அவர்கள் இரண்டாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸிடம் சமீபத்தில் தோற்றனர். அவர்களுக்கு ஒரே ஒரு நல்ல விஷயமாக அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே.எல். ராகுலுக்கு பதில் களமிறக்கபட்ட குயின்டன் டி காக் நன்றாக ஆடி வருகிறார். அவரது ஆட்டம் அணியை மேலே கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.