தமிழ்நாடு அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


திமுக அமைச்சரவையில் மாற்றம் 


2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தமிழ்நாடு முதலமைச்சராக முதல் முறையாக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றார். இதனிடையே ஆட்சிக்கு வந்த 10 மாதங்களிலேயே முதல் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. சாதியை சொல்லி அவமானப்படுத்தியதாக எழுந்த புகாரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாற்றப்பட்டார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கரின் பதவி ராஜகண்ணப்பணுக்கும், அவரின் பதவி  எஸ்.எஸ். சிவசங்கருக்கும் கிடைத்தது. 


இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து 3வது முறையாக தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி ராஜா அமைச்சராக மே 11 ஆம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி நாசர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 


ஆவடி தொகுதியின் சிறப்பு 


தமிழக சட்டமன்றத்தில் ஆவடி தொகுதிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது பூந்தமல்லி தொகுதியின் ஒரு பகுதியாக இருந்த ஆவடி தொகுதி மறு சீரமைப்பின்படி 2011 ஆம் ஆண்டு புதிய தொகுதியாக ஆவடி மாற்றப்பட்டது. 2011, 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்றது. 2011 ஆம் ஆண்டு  எஸ்.அப்துல் ரஹீம் காங்கிரஸ் வேட்பாளர் ஆர். தாமோதரனை தோற்கடித்தார். 2016 ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன், சா.மு.நாசரை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில்  தோற்கடித்தார். 


இந்த நிலையில் தான் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜனை, சா.மு.நாசர்  53 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். முதல் 2 தேர்தல்களிலும் ஆவடி தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த ராசியில் ஆவடி தொகுதியில் வெற்றி பெற்ற சா.மு.நாசர் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 


அடுக்கடுக்கான புகார்கள் 


ஆனால் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து அவ்வப்போது அவர் மீது துறை சார்ந்த குற்றச்சாட்டுகள் எழுந்தது. இவரின் மகன் ஆசிம் ராஜா திருவள்ளூர் மத்திய மாவட்ட ஆவடி மாநகர செயலாளராக பதவி வகித்து வந்த நிலையில், மாநகராட்சி பணிகளுக்கான ஒப்பந்த விவகாரத்தில் அவரது தலையீடு அதிகமாக இருந்ததால் தலைமைக்கு புகார் சென்றது. இதனால் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் ஆசிம் ராஜா பதவி பறிக்கப்பட்டது. 


இதற்கு முன்னதாக திருவள்ளூர் அருகே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை ஆய்வு செய்ய சென்றார் அமைச்சர் சா.மு.நாசர். அப்போது கட்சி தொண்டர்கள் நாற்காலி எடுத்து வரத் தாமதமானதால்  கல்லை எடுத்து எறிந்த வீடியோ வெளியாகி கடும் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் பலரும் அரசை குறை கூறினர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் அமைச்சர்கள் உட்பட திமுக நிர்வாகிகளை கவனமுடன் செயல்பட வேண்டும் என கண்டித்தார். இப்படியான நிலையில் எதிர்பார்த்ததைப் போலவே சா.மு.நாசரின் அமைச்சர் பதிவி பறிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பதவி பறிக்கப்பட்ட முதல் அமைச்சர் என்ற அவப்பெயர் சா.மு.நாசருக்கு ஏற்பட்டுள்ளது.