ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டி துவங்கும் முன் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரமான சலீம் துரானிக்கு சிறப்பு அஞ்சலி செலுத்தப் பட்டது.


சலீம் துரானிக்கு அஞ்சலி


நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில் பகல் நேர ஆட்டமாக 3.30 மணிக்கு துவங்கிய இந்த போட்டி துவங்கும் முன்பு அவரது புகைப்படம் பெரிய திரையில் திரையிடப்பட்டது. துரானி சில காலமாக நோயால் அவதிப்பட்டு தனது 88 வயதில் காலமானார். துரானி 1960 களில் நன்கு அறியப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்தார் மற்றும் அவரது கிரிக்கெட் திறன் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது.






2 நிமிட மவுன அஞ்சலி


அவரது மறைவை ஒட்டி, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர். நடுவர்களுடன் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்காலிக கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சை தேர்வு செய்து தவறான முடிவை எடுத்து பெரிய தோல்விக்கு இட்டுச்சென்றார்.


தொடர்புடைய செய்திகள்: MI vs RCB, IPL 2023 Live: முதல் போட்டியில் வெற்றி பெறுமா மும்பை; டாஸ் வென்ற பெங்களூரு பந்து வீச முடிவு..!


சன்ரைசர்ஸ் அணி தோல்வி


நியூசிலாந்தின் க்ளென் பிலிப்ஸ், மயங்க் அகர்வால், இங்கிலாந்தின் அடில் ரஷித் மற்றும் ஹாரி புரூக் என அதகளமான அணியாக இருந்த SRH அறிமுகப் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டம் ஆடி தலா 54 ரன்கள் குவிக்க, கேப்டன் சஞ்சு சாம்சனும் அரை சதம் கடந்தார். 



கேப்டன் இல்லாதது குறையா?


இதனால் 203 ரன்களை குவித்த ராஜஸ்தான் அணியின் பெரிய ஸ்கோரை சன்ரைசர்ஸ் துரத்த, மளமளவென விக்கெட்டுகள் சரிந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவ்னேஷ்வர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இந்த ஒரு போட்டியில் மட்டுமே தலைமை தாங்குகிறார், அவர்களின் வழக்கமான கேப்டன் ஐடன் மார்க்ரம் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடி வரும் நிலையில் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகைக்குப் பின் மீண்டு வருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.