உலகளவில் அதிகம் பணம் புழங்கும் விளையாட்டு தொடர்களில் ஒன்றாக ஐ.பி.எல் உள்ளது. உலகளவில் இரண்டாவது விலை உயர்ந்த விளையாட்டு தொடராக ஐபிஎல் உள்ளது. அமெரிக்காவில் நடத்தப்படும் தேசிய கால்பந்து லீகுக்கு அடித்தப்படியாக ஐ.பி.எல் இடம்பெற்றுள்ளது. உலகளவில் புகழ்பெற்று விளங்கும் இபிஎல் கால்பந்து தொடரையே மூன்றாவது இடத்துக்கு தள்ளியுள்ளது ஐ.பி.எல். 


உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் ஐபிஎல் தொடர்:


ஒளிபரப்பு செய்வதற்கான ஒப்பந்தத்தில் 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை ஈட்டியதன் மூலம் ஐபிஎல்-இன் மொத்த மதிப்பு 10.9 பில்லியர் டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது. தேசிய கால்பந்து லீகின் மதிப்பு 16 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல் தொடர்,  கடந்த 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது. 


உலகின் முன்னணி ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் கடந்தாண்டு மதிப்பு 37.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். பில்லியன் டாலர் நிறுவனமாக பிளிப்கார்ட் உருவெடுப்பதற்கு முன்பே, ஐ.பி.எல் தொடர், அந்த சாதனையை 2012ஆம் ஆண்டு படைத்திருந்தது. ஊடக உரிமைகளை தவிர ஸ்பான்சர்ஷிப்கள், ஐபிஎல் தொடருக்கு மிக பெரிய வருவாயை ஈட்டி தருகிறது.


இந்த தொடரின் மதிப்பு எதிர்காலத்தில், மேலும் உயரக்கூடும் என கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஐபிஎல் மீது தன்னுடைய கவனத்தை திருப்பியிருக்கிறார் சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான்.


ஐபிஎல் பங்குகளை வாங்க முனைப்பு காட்டும் சவுதி இளவரசர்:


ஐபிஎல்-இன் பங்குகளை வாங்க சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்திருப்பதாக புகழ்பெற்ற புளூம்பெர்க் செய்தி நிறுவனம் கட்டுரை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் பங்குகளை வாங்குவது குறித்து சவுதி அரேபியா தரப்பு, இந்திய அதிகாரிகளிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.


ஐபிஎல்லை ஒரு நிறுவனமாக மாற்றி அதை 30 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடும்படி இந்திய அதிகாரிகளிடம் சவுதி அரேபியா இளவரசரின் ஆலோசகர்கள் ஆலோசனை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம், சவுதி இளவரசர், இந்தியாவுக்கு வந்திருந்தபோது, இது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.


5 பில்லியன் டாலர்களை ஐபிஎல்லில் முதலீடு செய்து, அதை மற்ற நாடுகளிலும் விரிவடை செய்ய சவுதி தரப்பு தன்னுடைய விருப்பத்தை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கின்றனர். ஐபிஎல்லை வாங்க சவுதி விருப்பம் தெரிவித்ததாக வெளியான செய்திக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை.


ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில், தற்போது 10 அணிகள் உள்ளன. அடுத்த 10 ஆண்டுகளில், மேலும், 2 அணிகளை சேர்த்து ஐபிஎல் தொடரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்த செல்ல பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.


இதையும் படிக்க: Indian 2 An Intro: கலாய்க்கப்பட்ட கொரோனா நிகழ்வுகள்.. ஊழல் வில்லன்களை சுளுக்கு.. இந்தியன் 2 இன்ட்ரோ வீடியோ எப்படி?