ஐ.பி.எல். தொடரின் 8வது போட்டியில் ராஜஸ்தான் அணியும், பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் தவான், பிரப்சிம்ரன் காட்டிய அதிரடியால் 20 ஓவர்களில் அந்த அணி 197 ரன்களை குவித்தது. இதையடுத்து, 120 பந்துகளில் ராஜஸ்தான் அணிக்கு 198 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தொடக்க வீரராக அஸ்வின்


பஞ்சாப் அணியுடன் ஒப்பிடும்போது ராஜஸ்தான் அணி பலமிகுந்த அணியாக காணப்படுகிறது. ராஜஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமாக ஜோஸ் பட்லர் உள்ளார். பஞ்சாப் அணியில் சாம்கரண், அர்ஷ்தீப்சிங், ராகுல்சஹார் ஆகியோர் உள்ளனர். இருப்பினும் மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய தங்கள் அணியை உற்சாகப்படுத்த காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.




ஏனென்றால், இந்த போட்டியில் ஜெய்ஸ்வாலுடன் ரவிச்சந்திர அஸ்வின் ஆட்டத்தை தொடங்கினார். இதைக்கண்ட மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் மூழ்கினர். மேலும், எதற்காக பட்லர் களமிறங்கவில்லை என்றும் குழம்பினர். ஆனாலும், முதல்பந்திலே ஜெய்ஸ்வால் சிக்ஸர் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஒருவேளை பிரப்சிம்ரனுக்கு பிடித்த கேட்ச் காரணமாக பட்லர் காயத்தினால் இறங்கவில்லையா? என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு எழுந்தது.


டக் அவுட்:


ஆனால், ஜெய்ஸ்வால் 11 ரன்னில் ஆட்டமிழந்த பிறகு ஒன்டவுன் வீரராக பட்லர் களமிறங்கினார். இது ரசிகர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பட்லரை ஒன்டவுன் வீரராக களமிறக்குவது என்றால் தேவ்தத் படிக்கல், சாம்சன், ஹெட்மயர், ரியான் பராக், ஹோல்டர் ஆகிய ஒருவரில் யாரையேனும் தொடக்க வீரராக களமிறக்கியிருக்கலாம். ஆனால், கடைசி கட்டத்தில் தேவைப்படும் பேட்ஸ்மேனை தொடக்க வீரராக களமிறக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனாலும், சாம்சன் மற்றும் ராஜஸ்தான் அணியின் பரிசோதனை முயற்சி வீண் முயற்சியாகவே முடிந்தது என்றே கூறலாம். ஏனென்றால் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு தொடக்க வீரராக ஐ.பி.எல்.லில் களமிறங்கிய அஸ்வின் டக் அவுட்டாகி ஏமாற்றினார். 




சென்னை அணிக்காக ஆடியபோது அஸ்வின் கடந்த 2013ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிராக 120 ரன்கள் இலக்கை நோக்கி தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார். அந்த போட்டியில் 11 ரன்கள் எடுத்து அவுட்டானார். அஸ்வின் நல்ல பேட்ஸ்மேன் என்றாலும் பிரம்மாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, அஸ்வினை தொடக்க வீரராக களமிறக்கி அக்னி பரீட்சை செய்திருப்பது நியாயமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஸ்வின் இதுவரை 186 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 648 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்துள்ளார்.


பஞ்சாப் அணியில் பிரம்மாண்ட பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாவிட்டாலும் சாம்கரண், அர்ஷ்தீப்சிங், ராகுல்சாஹர், சிக்கந்தர் ராசா பிரதான பந்துவீச்சாளர்களாக உள்ளனர். நாதன் எல்லீசும் பந்துவீச்சில் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க:  RR vs PBKS, IPL 2023 LIVE: விக்கெட் எடுக்க திணறும் ராஜஸ்தான்.. மைதானம் முழுவதும் பவுண்டரிகளை விரட்டும் பஞ்சாப்..!


மேலும் படிக்க: First Female Umpire: ஆண்கள் கிரிக்கெட்டில் முதன்முறையாக களமிறங்கிய பெண் அம்பயர்..! சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்..!