சமூக ஊடக செல்வாக்குமிக்க சப்னா கில் மும்பை அந்தேரி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த கிரிமினல் குற்றச்சாட்டு புகாரைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷிஷ் சுரேந்திர யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சப்னாகில் - பிரித்விஷா மோதல்:
கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா சமூக ஊடக செல்வாக்குமிக்க சப்னாகில் மற்றும் அவரது நண்பர்கள் சிலருடன் இரவு விடுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு பல விமர்சனங்களை எதிர்கொண்டார். சப்னா கில் தனது ப்ரைவசி விவகாரத்தில் தலையிட்டதாக ப்ரித்வி ஷா குற்றம் சாட்டிய நிலையில், பதிலுக்கு சப்னா கில், ப்ரித்வி ஷா என்னிடம் தவறாக நடந்துகொண்டார், மானபங்கம் செய்தார் என்று குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில் இந்த சர்ச்சை இப்போது மீண்டும் வலுப்பெற்றுள்ளது. சப்னா கில் மும்பை அந்தேரி மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளித்த கிரிமினல் குற்றச்சாட்டு புகாரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷ்ஷ் சுரேந்திர யாதவ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு:
சப்னா கில்லின் புகாரில், பிரித்வி ஷாவும் அவரது நண்பரும் தன் மீது கொடுமையான சட்டவிரோதமான கிரிமினல் செயல்களை செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். பொது இடம் என்று கூட பார்க்காமல் ஒரு பெண்ணின் மாண்பைக் கெடுக்கும் வகையில் நடந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரித்வி ஷா தன் மார்பகங்களில் கையை வைத்து தள்ளிவிட்டார் என்றும் புகாரில் கூறியுள்ளார்.
தான் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டதற்காக சப்னா கில் சட்டப்பிரிவுகள் 354, 509, 324 ஆகியனவற்றின் கீழ் வழக்குப்பதியுமாறு கோரியுள்ளார். மேலும், பாலியல் தொல்லை நடந்ததற்கான ஆதாரமாக அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட சிகிச்சையின் ஆதாரங்களையும் அளித்துள்ளார்.
அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு:
இது குறித்து சப்னா கில்லின் வழக்கறிஞர் அலி காஷிஃப் கான் கூறுகையில், பிரித்வி ஷா மற்றும் அவரது நண்பர் ஆஷ்ஷ் சுரேந்திர யாதவ் தவிர விமான நிலைய அதிகாரிகள் சதீஷ் கவன்கர், பகவத் கரண்டே ஆகியோர் மீது ஐபிசி 166ஏ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடமையைச் செய்யத் தவறியதால் இந்தப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிருத்வி ஷா அவரது நண்பர் மீது சட்டப்பிரிவு 354ன் கீழ் வழக்குப்பதிவு செய்யத் தவறியதால் இந்த வழக்கு ஏர்போர்ட் அதிகாரிகள் மீது பாய்ந்துள்ளது. இந்த இரண்டு வழக்குகளும் ஏப்ரல் 17 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என்றார்.
சப்னா கில் யார்?
சப்னா கில் ஒரு சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர். மேலும் இன்ஸ்டாகிராமில் 2,20,000 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்களைக் கொண்டுள்ளார். காசி அமர்நாத், நிருவா சலால் லண்டன், மேரா வதன், ரவி கிஷன் மற்றும் தினேஷ் லால் யாதவ் போன்ற திரைப்படங்களில் சப்னா கில் நடித்துள்ளார்.சண்டிகரை சேர்ந்தவர் கில், மும்பையில் வசிப்பவர். வீடியோ பகிர்வு ஆப்பான ஜோஷ், மல்டிமீடியா உடனடி செய்தியிடல் ஆப்பான ஸ்னாப்சாட் மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் கில் மிகவும் ஆக்டிவ்வாக இயங்கி வருகிறார்.