ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனையை சமன் செய்தார் கிளென் மேக்ஸ்வெல்.


எலிமினேட்டர் போட்டி:


குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று (மே 21) நடைபெற்ற குவாலிபயர் 1ல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பை அந்த அணி பெற்றது. இச்சூழலில் தான் குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே22) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.


அந்தவகையில் இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணி வெளியேறிவிடும். வெற்றி பெறும் அணி குவாலிபயர் 2 ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும். 


டக் அவுட் ஆன மேக்ஸ்வெல்:


இந்நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அந்த அணியின் கேப்டன் பாப் டூ பிளெசிஸ் 14 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 17 ரன்கள் எடுத்தார். அதேபோல் விராட் கோலி 24 பந்துகள் களத்தில் நின்று 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 33 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.


பின்னர் களம் இறங்கிய கேமரூன் கிரீன் 21 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 27 ரன்கள் எடுத்தார். அப்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12.3 ஓவர்கள் முடிவில் 97 ரன்கள் மட்டுமே எடுத்து இக்கட்டான சூழலில் இருந்தது. இதனிடையே களத்தில் நின்றார் ரஜத் பட்டிதர். அப்போது திணறிக்கொண்டிருந்த பெங்களூரு அணியை தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் கிளென் மேக்ஸ்வெல் மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  


ஆர்.சி.பி வீரர்களின் மோசமான சாதனை:


ஆனால் மேக்ஸ்வெல்லோ ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய பந்தில் ஓங்கி அடிக்க பவுண்டரி லைனில் நின்ற துருவ் ஜூரெல் கேட்ச் பிடித்தார். இதனால் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் முறையில் வெளியேறினார் கிளென் மேக்ஸ்வெல். 


இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை டக் அவுட் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மற்றொரு வீரரான தினேஷ் கார்த்திக்கின் மோசமான சாதனையை சமன் செய்தார். அதாவது தினேஷ் கார்த்திக் ஐபிஎல் போட்டிகளில் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். இந்த மோசமான சாதனையை தான் தற்போது பெங்களூரு அணி வீரர் மேக்ஸ்வெல் சமன் செய்திருக்கிறார்.


இவர்களுக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மா (17 முறை டக் அவுட்) வும் பியூஸ் சாவ்லா (16 முறை டக் அவுட்) இருக்கின்றனர். அதேநேரம் சர்வதேச டி20 போட்டிகளை பொறுத்தவரை மேக்ஸ்வெல் 32 முறை டக் அவுட் ஆகி 4 வது இடத்தில் உள்ளார். கொல்கத்தா நைட்ரைடடர்ஸ் அணி வீரர் சுனில் நரைன் 44 முறை சர்வதேச டி20 போட்டிகளில் டக் அவுட் ஆகி முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Virat Kohli IPL Record: ஐபிஎல் வரலாற்றில் மேலும் ஒரு சாதனை! கிங் கோலி அசத்தல்! அப்படி என்ன?


மேலும் படிக்க: T20 World Cup 2024: ஐபிஎல்லில் அசத்தும் சுனில் நரைன்: டி20 உலகக் கோப்பைக்காக ரஸல் வைத்த முக்கிய கோரிக்கை!