தனது அம்மா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருடன் தினமும் செல்போனில் பேசி வருவதாகவும் கொல்கத்தா அணி வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் கூறியுள்ளார்.
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 21) குவாலிபயர் போட்டி 1 நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.
முதல் போட்டியில் களம் இறங்கிய குர்பாஸ்:
முன்னதாக நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரராக ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் களம் இறங்கினார். கடந்த சீசனில் கொல்கத்தா அணியில் அறிமுகமான இவர் 11 போட்டிகளில் விளையாடி இருந்தாலும் இந்த சீசனின் முதல் போட்டியில் நேற்று அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்.
அந்தவகையில் மொத்தம் 14 பந்துகள் களத்தில் நின்ற இவர் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 23 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் பவர் ப்ளேவில் கொல்கத்தா அணியால் நல்ல ஸ்கோரை பதிவு செய்ய முடிந்தது. முன்னதாக லீக் போட்டிகள் வரை அவரை களத்தில் இறக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணம் அவருடைய தாயாரின் உடல்நிலைதான். அதாவது உடல் நிலை சரியில்லாம் இருந்த தன்னுடைய தாயாரை பார்க்க ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆப்கானிஸ்தான் சென்றிருந்தார்.
இந்நிலையில் தான் குவாலிபயர் போட்டியில் நேற்று அதிரடியாக களம் இறங்கினார். திடீரென அவர் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியது தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்தது.
கொல்கத்தா அணியும் என் குடும்பம் தான்:
இச்சூழலில் இதுகுறித்து ரஹ்மானுல்லா குர்பாஸ் பேசுயுள்ளார். அதில், “எனது அம்மா இப்போதும் மருத்துவமனையில் தான் இருக்கிறார். நான் அம்மாவை பார்க்க சென்றிருந்த போது, கொல்கத்தா அணியிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த நேரத்தில் தான் பில் சால்ட் இங்கிலாந்து புறப்படுவதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.
கொல்கத்தா அணி தரப்பில், "குர்பாஸ் எங்கே இருக்கிறாய்? நீ இப்போது இங்கு தேவை" என்று மெசேஜ் கொடுக்கப்பட்டது. அதேபோல், எனது பதிலையும் அணி நிர்வாகம் எதிர்பார்த்திருந்தது. அதற்கு நான், நிச்சயம் வருகிறேன் என்று பதிலளித்தேன். எனது அம்மாவும் என்னுடன் செல்போனில் பேசி வருகிறார். கொல்கத்தா அணியும் எனது குடும்பத்தை போல் தான். நிச்சயம் என்னுடைய அணிக்கு சிறந்த வீரராகவும், எனது அம்மாவுக்கு நல்ல மகனாகவும் இருக்க வேண்டும். கடினமாக இருந்தாலும், சமாளித்து வருகிறேன்.
ஒரு கிரிக்கெட் வீரராக நமக்கு என்ன நடக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் ஒரு அணியின் பிளேயிங் லெவனில் 4 வீரர்களுக்கு தான் இடம் கிடைக்கும். அதனால் அதற்கு தேவையான மனநிலையை கொண்டிருக்க வேண்டும். வாய்ப்புக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும், வாய்ப்பு வரும் போது சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் ” என்று பேசியுள்ளார் ரஹ்மானுல்லா குர்பாஸ்.
மேலும் படிக்க: MS Dhoni: தோனியின் எதிர்கால திட்டம் என்ன? ஐபிஎல் உண்டா? இல்லையா? எக்ஸ்குளுசிவ் ரிப்போர்ட்
மேலும் படிக்க: Periyakulam: அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி; பைனலில் கோப்பையை வென்று அசத்திய இந்தியன் வங்கி அணி