ஐபிஎல் வரலாற்றில் 8000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்.


ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 21) குவாலிபயர் போட்டி 1 நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றது.


கிங் கோலியின் சாதனை:


இந்நிலையில் இன்று நடைபெறும் Eliminator  போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் விளையாடி வருகின்றன. குஜராத் மாநிலத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டூ பிளெசிஸ் மற்றும் விராட் கோலி களம் இறங்கினார். அதன்படி இன்றைய போட்டியில் 29 ரன்களை கடந்ததன் மூலம் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.


8000 ரன்களை கடந்த முதல் வீரர்:


அதாவது இதற்கு முன்னதாக 7971 ரன்களை எடுத்திருந்த கோலி இன்றைய போட்டியில் 29 ரன்களை எடுத்தன் மூலம் 8000 ரன்களை கடந்தார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் 8 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார்.


அதே சமயம் இந்த சீசனில் விராட் கோலி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி சராசரியாக 64.36 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 155.60 என 741 ரன்கள் எடுத்துள்ளார். 


 ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி இதுவரை 252 போட்டிகளில் விளையாடி, 38.69 சராசரி மற்றும் 131.95 ஸ்ட்ரைக் ரேட்டில் 8 சதங்கள், 55 அரை சதங்கள் உள்பட 8004 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் விளையாடி வரும் விராட் கோலி, தற்போது தனது 17வது ஐபிஎல் சீசனில் விளையாடி வருகிறார். அதேபோல், ஐபிஎல் தொடங்கப்பட்டது முதலே ஒரே அணிக்காக 250க்கு மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள ஒரே வீரர் விராட் கோலி.


இருப்பினும், இதுவரை விராட் கோலி தலைமையிலோ அல்லது வீரராகவோ விளையாடியபோதும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: IPL 2024: அம்மாவுக்கு உடம்பு சரியில்ல; ஆனாலும் KKR அணிக்காக ரஹ்மானுல்லா குர்பாஸ் எடுத்த முக்கிய முடிவு!


மேலும் படிக்க: Women Olympic Winners: ஒலிம்பிக்கில் இதுவரை இந்திய பெண்கள் செய்த சாதனை! முழு லிஸ்ட்