ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல். தொடர் எப்போது நடைபெற்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் அணி மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். ரோகித் சர்மா தலைமையில் 5 கோப்பையை வென்ற மும்பை அணி, இந்த முறை குஜராத் அணிக்காக முதல் முயற்சியிலே கோப்பையை வென்று தந்த ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களமிறங்கியுள்ளது.


தொடர் சறுக்கலில் ஹர்திக்:


5 முறை கோப்பையை வென்று தந்த ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஷிப்பை பறித்து, ஹர்திக் பாண்ட்யாவிடம் மும்பை அணி நிர்வாகம் கொடுத்ததை மும்பை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதன் வெளிப்பாடாகவே மும்பை ஆடிய முதல் போட்டியின்போது, மைதானத்தின் குறுக்கேச் சென்ற நாயை பார்த்து ஹர்திக் ஹர்திக் என்று கத்தி அநாகரீகமாக நடந்து கொண்டனர்.


அதுமட்டுமின்றி, சமூக வலைதளங்களில் ஹர்திக் பாண்ட்யாவிற்கு எதிராக தொடர் அவதூறுகள் மற்றும் களமிறங்கிய மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்விகள் என ஹர்திக் பாண்ட்யாவிற்கு சறுக்கல்கள் மேல் சறுக்கல்கள் விழுந்து கொண்டே இருக்கிறது.


சோம்நாத் கோயிலில் வழிபட்ட ஹர்திக் பாண்ட்யா:


இந்த சூழலில், குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயிலுக்கு ஹர்திக் பாண்ட்யா இன்று சென்று நேரில் வழிபட்டார். அங்குள்ள சிவலிங்கத்திற்கு ஹர்திக் பாண்ட்யாவே சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர் தோல்விகள், ரசிகர்கள் அதிருப்தி உள்ளிட்ட பல காரணங்களால் அவர் சாமி தரிசனம் செய்தார் என்று கூறப்படுகிறது. தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.






ஹர்திக் பாண்ட்யா ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடியவர். மும்பை அணிக்காக ஆடிய பிறகு இந்திய அணிக்கு தேர்வானார். இந்திய அணிக்கு தேர்வாகி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். பின்னர், மும்பை அணிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்பிய காரணத்தால் அவர் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். பின்னர், புதியதாக உருவான குஜராத் அணிக்காக அவர் கேப்டனாக ஐ.பி.எல்.லில் களமிறங்கினார்.


கேப்டனாக களமிறங்கிய முதல் ஐ.பி.எல்.லிலேயே கோப்பையை வென்று கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்த ஐ.பி.எல். தொடரிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பிரமிக்க வைத்தார். இதன் காரணமாகவே அவரை மீண்டும் மும்பை அணிக்கு அழைக்கப்பட்டார். மும்பை அணிக்கு அழைக்கப்பட்ட அவர் கேப்டனாக அணிக்கு வந்தார்.


ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன்சியை பறித்து ஹர்திக் பாண்ட்யாவிடம் கொடுத்தது மும்பை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில்தான் ஹர்திக் பாண்ட்யா சோம்நாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். சாமி தரிசனத்திற்கு பிறகு இனி வரும் போட்டிகளில் மும்பை அணி வெற்றி கொடி நாட்டுமா? அல்லது தோல்வி தொடருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


மேலும் படிக்க: Shashank Singh PBKS: பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட வீரர்! அனைவரின் கவனத்தையும் ஷஷாங்க் ஈர்த்தது எப்படி?


மேலும் படிக்க: Suryakumar Yadav: மாஸாக மீண்டு(ம்) வந்த சூர்யகுமார்; வெளியான கெத்து வீடியோ; குஷியில் ரசிகர்கள்!