இந்திய கிரிக்கெட்டில் ஒரு சச்சின் தெண்டுல்கருக்குப் பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரு வீரர் என்றால் அது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிதான்.


இன்றைக்கு மகேந்திர சிங் தோனியை அனைவரும் தல என்று அன்போடு அழைப்பதையும், தோனி பேட்டிங் செய்ய களத்திற்கு வரும்போது அவரது பெயரை முழங்குவதையும் வைத்து பார்க்க முடியும். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். 


இன்றைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் தோனியின் மீது அன்பையும் மரியாதையும் வெளிப்படுத்தலாம். ஆனால் தோனியின் ஆரம்ப காலகட்டம் மிகவும் எளிதாக அமைந்துவிடவில்லை. வங்கதேச அணிக்கு எதிராக அறிமுகமானார். ஆனால் அவரது தொடக்கப் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வந்தார் தோனி. இதனால் இந்திய அணியின் ஸ்குவாடில் தோனிக்கு இடம் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற கேள்வி தோனிக்கும் தோனியின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இருந்தது. 


முத்திரை பதித்த ஆட்டம்


ஆனால் வங்கதேச தொடருக்குப் பின்னர் நடைபெற்ற பாகிஸ்தான் தொடரில் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது. மூன்றாவது வீரராக களமிறங்கிய தோனி பாகிஸ்தான் அணியின் அபாயகரமான பவுலர்களான முகமது ஷமி, அப்துல் ரஷாக் உள்ளிட்டவர்களின் பந்துவீச்சினை சமாளித்து சிறப்பாக விளையாடினார் தோனி. 






எதிர் முனையில் யார் தங்களது விக்கெட்டினை இழந்தாலும் தோனி மட்டும் நங்கூரம் போல் நின்று, பாகிஸ்தான் பந்து வீச்சினை சிதறடித்தார். போட்டியின் நான்காவது ஓவரில் களமிறங்கிய தோனி, 155  நிமிடங்கள் களத்தில் இருந்து 123 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகளும் நான்கு சிக்ஸர்களும் பறக்கவிட்டு 148 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ஹஃபீஸ் பந்தில் சோயிப் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் முதல் சதம் இதுதான். 


20 ஆண்டுகள் ஆச்சு


இந்த போட்டிக்குப் பின்னர்தான் தோனி குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் பேச ஆரம்பித்தது. கிரிக்கெட் உலகத்தில் தோனி தனக்கான முதல் அடையாளத்தை பதித்த தினம் இன்றுதான். கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்த முத்திரையை பதித்தார் தோனி. 


இந்நிலையில் தோனி இன்று அதாவது ஏப்ரம் மாதம் 5ஆம் தேதி 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மற்றொரு அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர். அதாவது சரியாக 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் போட்டியில் தல தோனியின் தரிசனத்தைக் காணவே அவரது ரசிகர்கள் மைதானத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.