குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி பஞ்சாப் கிங்ஸ் அணியை வெற்றி பெறச் செய்த ஷஷாங்க் சிங் எப்படி அந்த அணியில் இடம் பெற்றார் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.


பஞ்சாப் அணியை வெற்றி பெறச் செய்த ஷஷாங்க் சிங்:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. அந்தவகையில் ரசிகர்களின் ஆதரவுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 17 வது லீக் போட்டி நேற்று (ஏப்ரல் 4) நடைபெற்றது. முன்னதாக, இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. பின்னர், இலக்கை நோக்கி களம் இறங்கியது ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்தது.


அப்போது 60 பந்துகளில் 117 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் பேட்டிங் செய்து கொண்டிருந்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஆனால் அடுத்து வந்த வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி ஓவர் த்ரில் வெற்றி பெற்றது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் பெயர் மாற்றம் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்ட ஷஷாங்க் சிங்கின் வெறித்தனமான ஆட்டத்தால் தான் அந்த அணி வெற்றி பெற்றது.


அந்தவகையில் கடைசி வரை களத்தில் நின்ற அவர் 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 61 ரன்களை எடுத்து அணிக்கு வெற்றி பெறச் செய்தார். இதன் மூலாம் ஏலத்தில் பெயர் குழறுபடியால் தவறுதலாக எடுக்கப்பட்ட வீரர் என்ற அடையாளத்துடன் தெரிந்த இவர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.  இச்சூழலில் ஷஷாங்க் சிங் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்:


பெயர் குழப்பத்தால் மாற்றி எடுக்கப்பட்ட வீரர்:


கடந்த 2023 ஆம் ஆண்டு துபாயில் ஐ.பி.எல் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உட்பட 10 அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். இதில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா வேறு ஒருவரை ஏலத்தில் எடுப்பதற்கு பதிலாக ஷஷாங்க் சிங்கை மாறுதலாக ஏலத்தில் எடுத்துவிட்டனர். ஆனால் உண்மையிலேயே இவரை ஏலத்தில் எடுக்க அந்த அணி விரும்பவில்லை.





ஆனால் தவறுதலாக ஏலத்தில் எடுத்ததிருந்தாலும் தங்கள் அணியில் இடம்பெற்றதால் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவும் வெளியிட்டிருந்தது.  குஜாராத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிக்கு பங்களித்த ஷஷாங்க் சிங்கை கண்டு மகிழ்ச்சி அடைவதாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் கூறியுள்ளது. 


அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது எப்படி?


சத்தீஸ்கர் மாநிலம் டர்க் மாவட்டத்தில் பிலாய் என்ற பகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பிறந்தவர் ஷஷாங்க் சிங். கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டு விஜாய் ஹசாரே ட்ராபி தொடரில் விளையாடினார். அதேநேரம் ஐ.பி.எல் சீசனை பொறுத்தவரை கடந்த 2017 ஆம் ஆண்டு டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் முதன் முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதாவது டெல்லி அணி இவரை 10 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் டெல்லி அணியின் ப்ளேயிங் லெவனில் இவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.


இதனைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடந்த 2018 ஆம் ஆண்டு 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்ற இவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதேநேரம் உள்நாட்டு டி20 போட்டிகளை பொறுத்தவரை 58 போட்டிகளில் விளையாடிஉள்ள இவர் 137.34 ஸ்ட்ரைக் ரேட்டில் 754 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் ஆல்ரவுண்டரான இவர் தேசிய அளவில் சத்தீஸ்கர் அணியில் விளையாடுகிறார். 


இந்நிலையில் தான் கடந்த ஆண்டு ஏலத்தில் மாற்றி எடுக்கப்பட்ட வீரராக இருந்தார். ஆனால் தற்போது தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். முன்னதாக இந்த சீசனை பொறுத்தவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணிக்கு எதிரான போட்டியில் 8 பந்துகளில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உள்பட 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.


லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 7 பந்துகளில் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததோடு அணியையும் வெற்றி பெறச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.