தான் அடிக்கடி ஃபீல்டிங் மாற்றம் செய்வது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி கருத்து தெரிவித்துள்ளார். 


10வது முறையாக ஃபைனல் சென்ற சிஎஸ்கே


16வது ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகள் முடிவில் குஜராத், சென்னை, மும்பை, லக்னோ அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இதில் நேற்று நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சேப்பாக்கத்தில் குஜராத், சென்னை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. 


தொடர்ந்து பேட் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. தோனி தலைமையில் 14 சீசனில் விளையாடியுள்ள சென்னை அணி 10வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதனை சென்னை அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். 


புகழ்ச்சி மழையில் தோனி


நேற்றைய ஆட்டத்திலும் சென்னை அணி பேட்டிங்கின் போது ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே ஆகியோரை தவிர பிற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதேசமயம் ஃபீல்டிங்கின் போது கேப்டன் தோனி ஆலோசனைகளால் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தது. இதனை குறிப்பிட்டு ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதேசமயம் தோனி பந்துக்கு பந்து ஃபீல்டிங்கை மாற்றுவது குறித்தும் ஒவ்வொரு போட்டியின் போதும் விமர்சனம் எழுந்து வருகிறது. இதனைப் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார். 


எரிச்சலூட்டும் கேப்டன்


குஜராத் அணிக்கு போட்டிக்குப் பின் பேசிய தோனி,  “நான் அடிக்கடி ஃபீல்டிங் மாற்றுவதால் வீரர்கள் என்னை ‘எரிச்சலூட்டும் கேப்டன்’ ஆக பார்க்க வாய்ப்புள்ளது. காரணம் நான் ஒவ்வொரு பந்துக்கும் ஃபீல்டிங்கை மாற்றிக் கொண்டே இருப்பேன். என் உள்ளுணர்வுக்கு ஏற்ற வகையில் ஃபீல்டிங் மாற்றப்படும். இது பல நேரங்களில் அணிக்கு பயனளித்தும் உள்ளது. நான் சென்னை அணி வீரர்களிடம் வைக்கும் கோரிக்கை ஒன்று தான். ‘ஒரு கேட்சை கைவிடும்போது என்னிடமிருந்து எந்த எதிர்வினையும் இருக்காது. ஆனால் ஃபீல்டர்களின் கவனம் எப்போதும் என்மீது இருக்க வேண்டும். அதனால் என்னை கவனியுங்கள்”  என அவர் தெரிவித்துள்ளார். 


தொடர்ந்து இந்த சீசனுடன் தோனி ஓய்வுப் பெற உள்ளார் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். அடுத்த ஐபிஎல் சீசனுக்கான ஏலத்திற்கு இன்னும் 8, 9 மாதங்கள் இருக்கும் நிலையில் இப்போது ஓய்வு பற்றி பேசுவது சரியாக இருக்காது. விளையாட்டோ அல்லது பயிற்சியோ நான் எப்போதும் சென்னை அணியுடன் தான் இருப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Behind The Movie: விஜயகாந்துக்கு எழுதிய கதை.. உள்ளே வந்த சூர்யா.. ஆதவன் படத்துக்கு பின்னால் இவ்வளவு விஷயம் இருக்கா?