சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் மோசமான செயல்பாட்டிற்கு, அந்த அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா  தனது டிவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். சிஎஸ்கே அணியின் ரசிகர்களின் செயல்பாடுகள்,  சென்னைக்கே உரித்தான நற்பெயரையும் களங்கப்படுத்தும் விதமாக மாறியுள்ள நிலையில், ஜடேஜா இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.



சென்னை ரசிகர்கள்...


சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் ஜடேஜா குறித்து பேசுவதற்கு முன்பாக, கிரிக்கெட்டிற்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான தொடர்பை முதலில் அறியலாம். இந்தியாவில் கிரிக்கெட் ஒரு பொழுதுபோக்காக மட்டுமின்றி, அனைத்து மக்களுக்குமான ஒரு சமயமாகவே பார்க்கப்படுகிறது. அதிலும், குறிப்பாக கிரிக்கெட்டை ரசிக்கும் சென்னை மக்களுக்கு என ஒரு தனி அடையாளமே உண்டு. ஆம், கிரிக்கெட் விளையாடும் உலக நாடுகளால், சென்னை ரசிகர்கள் அறிவார்ந்த சென்னை ரசிகர்கள் (knowledgeable Chennai crowd)  என்று தான் அழைக்கப்படுகின்றனர். காரணம், இந்திய அணி மட்டுமல்ல, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு அணியையும் பாராட்டவும், கொண்டாடவும் சென்னை மக்கள் தவறியதில்லை.


பாகிஸ்தானை கொண்டாடிய சென்னை ரசிகர்கள்:


அதற்கு உதாரணம், அரசியலில் மட்டுமின்றி கிரிக்கெட் உலகிலும் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் உடன் கடந்த 1999ம் ஆண்டு இந்திய அணி மோதியது. பல்வேறு அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் அந்த டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் சச்சினின் அபார சதத்திற்கு மத்தியிலும், கடுமையாக போராடிய பாகிஸ்தான் 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதை கண்ட மைதானத்தில் திரண்டு இருந்த ரசிகர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்பு விண்ணை முட்டும்படியான கைதட்டலால் பாகிஸ்தான் வீரர்களை பாராட்டினார். எதிர் மற்றும் எதிரி நாட்டு அணியின் வெற்றியை கூட பாராட்டிய அந்த ரசிகர் கூட்டத்தை தான், அறிவார்ந்த சென்னை மக்கள் என கிரிக்கெட் உலகம் கொண்டாடுகிறது.


ஜடேஜாவை சாடும் சென்னை ரசிகர்கள்:


ஆனால், அதே சென்னை ரசிகர்களின் இன்றைய செயல்பாடு என்பது முற்றிலும் வேறாக உள்ளது. தங்களுக்கு பிடித்த வீரர் களமிறங்க வேண்டும் என்பதற்காக, சொந்த அணியின் வீரரையே அவுட்டாக வலியுறுத்துவது, விக்கெட் வீழ்ந்தால் மகிழ்ச்சி அடைவது மற்றும் முழக்கங்களை எழுப்புவது என தலைகீழாக மாறியுள்ளது. இவர்களது இந்த தரம் தாழ்ந்த செயல்பாடு, ஒரு வீரரை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை சற்றும் யோசிப்பதில்லை.  ஏற்கனவே கேதர் ஜாதவ் சென்னை அணி ரசிகர்களால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான நிலையில்,  அந்த வரிசையில் அடுத்து இணைந்து இருப்பது சென்னை அணியின் முக்கிய நட்சத்திர வீரரான ஆல்-ரவுண்டர் ஜடேஜா தான். தோனி இறங்க வேண்டும் என்பதற்காக தன்னை அவுட்-ஆக ரசிகர்கள் வலியுறுத்துவது குறித்து, ஜடேஜாவே வெளிப்படையாக பேசி இருந்தார். ஆனாலும், சென்னை ரசிகர்கள் எந்த மாற்றத்தையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. 


ஜடேஜா வெளியிட்ட பதிவு:


இதனிடையே, குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்தி, சென்னை அணி வெற்றி பெற ஜடேஜா முக்கிய பங்கு வகித்தார். இதற்காக, அப்ஸ்டாக் அதிக விலைமதிப்புமிக்க வீரர் என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ஜடேஜா “அதிக விலைமதிப்புமிக்க வீரர் என்ற விருதை வாங்கிய புகைப்படத்துடன் சேர்த்து, அப்ஸ்டாக்கிற்கு தெரிகிறது ஆனால் சில ரசிகர்களுக்கு தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், சென்னை ரசிகர்களின் செயல்பாடு ஜடேஜாவை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதை நம்மால் உணர முடிகிறது. எனவே அறிவார்ந்த சென்னை ரசிகர்களின் தற்போதைய செயல்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதை அவர்களே தான் உணர வேண்டும்.


ஜடேஜா படைத்த சாதனை:


குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். முன்னதாக இந்த சாதனைப் பட்டியலில் த்வெயின் பிராவோ மற்றும் சுனில் நரைன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். அதேநேரம், ஐபிஎல் தொடரில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ரன்கள் சேர்த்து, 150 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ஜடேஜா பெற்றுள்ளார்.