நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஆதவன்’ படம், நடிகர் விஜயகாந்துக்கு எழுதப்பட்ட கதை என பழைய நேர்காணல் ஒன்றில் நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. 


கடந்த 2009 ஆம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, நடிகை நயன்தாரா, வடிவேலு, சரோஜாதேவி, ஆனந்த்பாபு, பரத் முரளி, சரோஜாதேவி, ராகுல் தேவ், சாயாஜி சிண்டே, ரமேஷ் கண்ணா, அனுஹாசன், மனோபாலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் “ஆதவன்”. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நடிகராக உதயநிதி ஸ்டாலின் சிறிய வேடத்தில் அறிமுகமாகி இருந்தார். 


ஆதவன் படத்தின் கதை, திரைக்கதையை நடிகர் ரமேஷ் கண்ணா எழுதியிருந்தார். ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் சூர்யா, ஹீரோவாக கே.எஸ்.ரவிக்குமார் கமிட்டாகியுள்ளனர். ஆனால் படத்திற்கு சரியான கதை கிடைக்காமல் கே.எஸ்.ரவிக்குமார் தவித்துள்ளார். உடனே இதுகுறித்து ரமேஷ் கண்ணாவிடம் அவர் பேசும் போது, தன்னிடம் ஒரு கதை இருப்பதாக கூறியுள்ளார். கதை கேட்டதும் அனைவருக்கும் திருப்தியாக இருந்துள்ளது. அப்படித் தான் ஆதவன் படம் உருவாகியுள்ளது.  


இதுதொடர்பாக ரமேஷ் கண்ணா நேர்காணல் ஒன்றில் நினைவுகளை பகிர்ந்துள்ளார். அதில், ஆதவன் படம் கேப்டன் விஜயகாந்திற்கு எழுதப்பட்ட கதை. ஒருநாள் விஜயகாந்த் என்னிடம், ‘நான் ராவுத்தர் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறேன். நீ ஒரு கதையை ரெடி பண்ணி அவரிடம் சொல்’ என சொன்னார். உடனே நானும் விவேக்கும் தினமும் கடற்கரைக்கு செல்வோம். அப்படி போகும்போது சில சீன் நான் சொல்வேன். விவேக் அது எப்படி இருக்கும்ன்னு சொல்வாரு. 


ஏன்னா அவனுக்கு விஜயகாந்த் பற்றி நன்றாக தெரியும். அப்படி ஒரு கதையை ரெடி பண்ணி ராவுத்தர் கிட்ட சொல்லிட்டேன். அவருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. பொள்ளாச்சில தம்பி (விஜயகாந்த்)  இருப்பாரு போய் சொல்லு என சொன்னார். அங்கு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த தர்மசக்கரம் படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டிருந்தது. நானும் கேப்டனை சந்தித்து கதை சொல்லி ஓகே ஆகி விட்டது. 


ஆனால் கால மாற்றத்தால் அந்த கதை எடுக்க முடியாமல் போய்விட்டது. கடைசியில் சூர்யா நடிக்க “ஆதவன்” படமாக அந்த கதை உருவானது என ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். 


மேலும் முதலில் வடிவேலு பண்ண வேண்டிய கேரக்டரில் இவர் தான் நடித்து வந்தார். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வடிவேலு பெயரை பரிந்துரைத்துள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் உடனடியாக ஓகே சொல்லி விட்டார். நான், என்னுடைய கதையில எனக்கே கேரக்டர் இல்லைன்னா எப்படி என அவரிடம் கேட்டேன். டிஸ்கஷன் ஆரம்பிச்சிது. என்னை பண்ணன்னு தெரியாம நானே அந்த ‘இளையமான்’ கேரக்டரை பண்ணி விட்டேன். ஆதவன் படத்தை பார்த்தால் கதைக்கும், என்னுடைய கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது எனவும் ரமேஷ் கண்ணா கூறியுள்ளார்.