ஐ.பி.எல். 2023ல் பெங்களூர் அணி பிளே ஆஃப்களை அடையத் தவறியதை அடுத்து விராட் கோலி தனது RCB ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்தார். விராட் கோலி தனது ட்விட்டர் பதிவில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அடுத்த சீசனில் மீண்டும் வலுவாக திரும்பி வரும் என்று உறுதி கூறியுள்ளார்.
வெளியேறிய ஆர்சிபி
ஐ.பி.எல். 2023ல் ஃபாஃப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஆர்.சி.பி., லீக் கட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான கடைசி ஆட்டத்தில் தோல்வியடைந்தது. இது RCB க்கு கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டமாக இருந்த நிலையில், தோல்வியுடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டதோடு, மும்பை இந்தியன்ஸிடம் பிளே ஆஃப் இடத்தையும் இழந்தனர். இந்த போட்டியில் விராட் கோலி அணிக்காக சதம் அடித்து அசத்தினார். ஆனால் அப்போதும் அதிர்ஷ்டம் RCB க்கு சாதகமாக அமையவில்லை. இது விராட் கோலிக்கு இந்த சீசனில் இரண்டாவது சதமாகும். அதுவும் இதற்கு முந்தைய போட்டியில் தான் மற்றொரு சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தெரிவித்த கோலி
பிளே ஆஃப்-களில் இருந்து RCB வெளியேற்றப்பட்ட பிறகு, விராட் கோலி சமூக ஊடகங்களில் அணிக்கு ஆதரவளித்த தனது அணியின் ஆதரவாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார். தனது அணி இலக்கை எட்டவில்லை, ஆனால் மீண்டும் வலுவாக திரும்பி வரும் என்பதில் உறுதியாக இருந்தார். "இந்த சீசன் பல நல்ல தருணங்களைக் கொண்டிருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் அடைய வேண்டிய இலக்கை எட்டவில்லை. ஏமாற்றம்தான் ஆனால் நாம் தலை நிமிர்ந்து நடக்கலாம். எங்களை எல்லா நேரத்திலும் ஆதரித்த எங்கள் விசுவாசமான ஆதரவாளர்களுக்கு நன்றி. பயிற்சியாளர்கள், நிர்வாகம் மற்றும் எனது அணியினருக்கு பெரிய நன்றி. நாங்கள் வலுவாக மீண்டும் திரும்பி வருவோம்," என்று விராட் கோலி ட்வீட் செய்துள்ளார்.
கோலியின் அதிரடி பேட்டிங்
இந்த சீசன் ஐபிஎல்-இல் விராட் கோலி ஒரு அசாத்தியமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினார். RCB தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அவர், கடந்த இரண்டு ஆட்டங்களில் 2 சதங்களை அடித்துள்ளார். 139+ ஸ்டிரைக் ரேட்டில், கோலி 14 ஆட்டங்களில் 2 சதம் மற்றும் 6 அரை சதங்களுடன் 639 ரன்கள் எடுத்துள்ளார். 53.25 சராசரியுடன், ஐபிஎல் 2023 இல் பிளேஆஃப்களுக்கு முன்னதாக மூன்றாவது அதிக ரன்களை எடுத்தவர் என்ற பெயரை கோலி எடுத்துள்ளார்.
வாய்ப்பை தவறவிட்ட ஆர்சிபி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 7 ஆட்டங்களில் வென்று 14ல் 7ல் தோல்வியடைந்தது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன், 6வது இடத்தை பிடித்தது. 4வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸை விட இரண்டு புள்ளிகள் மட்டுமே குறைவாக இருந்தாலும். ரன் ரேட் விகிதத்தை நன்றாக வைத்திருந்தது அந்த அணி. ஒரு வேளை அந்த போட்டியை பெங்களூரு அணி வென்றிருந்தால் எந்த சந்தேகமும் இன்றி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருக்க முடியும். இருப்பினும், கடந்த போட்டியில் RCB அங்கு 198 ரன்கள் இலக்காக நிர்ணயித்த நிலையிலும், GT அவர்களை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஐபிஎல் 2023 இல் சுப்மான் கில் தனது இரண்டாவது சதத்தை அடித்து, குஜராத்தை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.