IPL 2023: ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கடந்த இரண்டு மாதங்களாக உச்சரித்துக்கொண்டு இருக்கும் வார்த்தை ஐபிஎல். 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இந்தியன் பிரிமியர் லீக் இந்த ஆண்டுடன் 16 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உலகமே உற்று நோக்கும் கிரிக்கெட் லீக் போட்டியாக இந்த தொடர் இருக்க காரணம், பல இளம் வீரர்களை அடையாளப்படுத்துகிறது. மேலும், கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. அவற்றில் ஒரு சில போட்டிகளில் எதிரணிக்கு உடனுக்குடன் பதிலடி கொடுக்கப்பட்ட நிகழவுகள் எல்லாம் அரங்கேறியுள்ளது.




மஞ்சள் ஆர்மி:


16வது சீசன் தொடங்கியதும் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் கூறிய ஒற்றை கருத்து, இது தான் சென்னை அணியின் கேப்டன் தோனியின் கடைசி சீசன். இந்த சீசனுடன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என பலரும் கூறிவந்தனர். இதனால் சென்னை அணியின் போட்டி நடந்த மைதானங்களை அவரது ரசிகர்கள் மஞ்சள் நிற ஜெர்சியால் நிரப்பி இருந்தனர். பெங்களூரு மைதானத்தில், மைதானத்தின் ஒலி, ஒளி அமைப்பாளர் ஆர்.சி.பி... ஆர்.சி.பி என மைக்கில் கூற, மைதானத்தில் நிரம்பியிருந்த தோனியின் ரசிகர்கள் சி.எஸ்.கே என ஒருசேர முழக்கமிட்டனர். இதனால் சின்னச்சாமி மைதானமே அதிர்ந்தது.




நெகிழ்ச்சியில் தோனி:


அதேபோல், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. வழக்கம் போல், தோனியை பின் தொடர்ந்த ரசிகர்களின் ஆதரவால் மனம் நெகிழ்ந்த தோனி, இவர்கள் அனைவரும் எனக்கு ஃபேர்வெல் கொடுக்க வந்துள்ளனர். அடுத்த போட்டியில் கொல்கத்தா அணியின் ஜெர்சியை அணிந்து வந்து கொல்கத்தா அணிக்கு ஆதரவு அளிப்பார்கள் எனக் கூறினார். தோனியின் இந்த பேச்சு தோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை உண்டாக்கியது தான். அவ்வளவு தான் தோனியின் கடைசி சீசன் இதுதான் போல, அதை தல இவ்வாறு கூறி நம்மை தயார் படுத்துகிறார் என சமூக வலைதளங்களில் புலம்பத் தொடங்கினர். 




ஒவ்வொரு போட்டியின் போது சென்னை அணியில் விக்கெட்டுகள் விழும் போது சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தபடி தான் இருந்தனர். அதற்கு காரணம் 5 விக்கெட்டுகள் விழுந்து விட்டால், தோனி களமிறங்குவார், தல தரிசனம் போதும் என்ற மனநிலையில் இருந்து வந்தனர். குறிப்பாக தோனிக்கு முன்னர் ஜடேஜா களமிறங்கும் போதும் “We Want Dhoni" என முழங்கி வந்தனர். இந்த ஆதரவை ஜடேஜா, இது எந்த மாதிரியான ஆதரவு? என கேள்வி எழுப்பினார். 




அடுத்த சீசன்?


இந்நிலையில், சுரேய் ரெய்னா, மொயின் அலி உள்பட சென்னை அணியின் வீரர்கள் தோனி அடுத்த ஆண்டும் விளையாடுவார் என கூறி வருகின்றனர். தோனி அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக ஆடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் ஏற்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், இது என்னுடைய கடைசி சீசன் என நீங்கள் தான் முடிவு செய்துள்ளீரகள் நான் இல்லை என பதில் அளித்தார். தோனியின் இந்த பதில் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவினை தல தோனி ரசிகர்களுக்காத் தான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.