IPL 2023: ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணியை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.  


நடப்பு ஐபிஎல் தொடரில் களமிறங்கிய 10 அணிகளில் குஜராத், சென்னை, லக்னோ மற்றும் மும்பை அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் இன்று அதாவது மே மாதம் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் 6வது இடம் பிடித்த ராஜஸ்தான் அணியின் வீரரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான ரவிச்சந்திரன் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 






அந்த வீடியோவில், ”இந்த ஆண்டு எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கும் எங்களை கிண்டலடித்தவர்கள் என அனைவருக்கும் நன்றிகள். அடுத்த ஆண்டு ஹல்லா போல், கொஞ்சம் சத்தமாவே போல் என கூறியுள்ளனர். அதேபோல், இன்று சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மைதானம் முழுவதும் மஞ்சளாக இருக்கும். எனவே நாங்கள் வீட்டில் இருந்தபடியே சென்னைக்கு விசில் போடவுள்ளோம்” என கூறியுள்ளார். 


ஐபிஎல் குவாலிபையர் -1:


அதைத்தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று முதல் குவாலிபையர் போட்டி நடைபெற உள்ளது. இதில், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இரவு 07.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.


சென்னையின் மோசமான வரலாறு:


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 3 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆனால், அந்த 3 போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடப்பாண்டில் இரு அணிகளும் விளையாடிய லீக் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. இதனால், இன்றைய போட்டியில் வென்று அதற்கு பழிவாங்க சென்னை அணி முனைப்பு காட்டி வருகிறது. அதோடு, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம். தோல்வியுற்றால் மீண்டும் குவாலிபையர் 2 போட்டியில் விளையாட வேண்டி இருக்கும்.


பிட்ச் அறிக்கை: 


சேப்பாக்கம் என்ற எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தின் பிட்ச் மேற்பரப்பு இன்று மெதுவாக இருக்கலாம். எனவே டாஸ் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது. குஜராத் டைட்டன்ஸ் அணி வலுவான பந்துவீச்சை கொண்டிருப்பதால், முதலில் அவர்களது சாய்ஸ் பந்துவீச்சாக கூட இருக்கலாம். 170 க்கு மேல் எடுக்கப்படும் ஸ்கோர் வெற்றிக்கு உகந்ததாக இருக்கும்.