ஐபிஎல் 2022ஆம் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. தற்போது உள்ள 8 அணிகள் தங்களுடைய தக்கவைப்பு வீரர்களின் பட்டியலை கடந்த 30ஆம் தேதி அறிவித்தனர். இதைத் தொடர்ந்து புதிதாக உள்ள இரண்டு அணிகள் ஏலத்திற்கு முன்பாக வீரர்களை எடுக்க தயாராகி வருகின்றன. மேலும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில்  ஐபிஎல் வீரர்கள் ஏலம் இருக்கும் என்று கருதப்பட்டது. 


இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் வரும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் பெங்களூருவில் இந்த மேகா ஏலம் நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது. 



இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் ஆங்கிலத்தளம் ஒன்றுக்கு தகவல் அளித்துள்ளார். அதில், ”கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில் ஐபிஎல் மெகா ஏலம் வரும் பிப்ரவரி மாதம் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும். அப்படி ஒருவேளை கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் ஏலத்தை துபாயில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். 


முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தொடர்பாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஆங்கிலத்தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “கடந்த முறை இந்தியாவில் தொடங்கிய ஐபிஎல் தொடரை கொரோனா பாதிப்பு காரணமாக பாதியில் நிறுத்தினோம். அதன்பின்னர் ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக யுஏஇயில் நடத்தி முடித்தோம். கடந்த முறையில் இந்தியாவில் உள்ளூர் போட்டிகளிலும் கொரோனா பாதிப்பு காரணமாக தடைப்பட்டு இருந்தன.ஆனால் இம்முறை உள்ளூர் போட்டிகள் எந்தவித தடையையும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே என அனைத்து தொடர்களிலும் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜனவரி முதல் ரஞ்சி கோப்பை தொடரும் தொடங்க உள்ளது. இந்தத் தொடர்கள் எதிலும் தற்போது வரை பெரியளவில் கொரோனா பாதிப்பு இல்லை. 


ஆகவே அடுத்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளை நடத்த எந்தவித தடையும் இருக்காது. மேலும் தற்போது நாம் இந்தியாவிலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். நியூசிலாந்து தொடர் வெற்றிகரமாக முடிந்தது. அதன்பின்னர் நமது அணி தென்னாப்பிரிக்கா செல்கிறது. எனவே ஐபிஎல் கிரிக்கெட் தொடரை அடுத்த ஆண்டு இந்தியாவில் நடத்த எந்தவித தடையும் வராது” எனக் கூறியிருந்தார். 


மேலும் படிக்க: ஶ்ரீசாந்த் To பும்ரா.. தென்னாப்பிரிக்காவில் மிரட்டிய இந்திய பந்து வீச்சாளர்கள் !